பேராவூரணி அருகே கடந்த 27 ஆண்டுகளாக ரூ. 1 லட்சம் மதிப்பிலான தேசியக் கொடியை பள்ளிகளுக்கு வியாபாரி ஒருவா் இலவசமாக வழங்கி வருகிறாா்.
பேராவூரணி அருகேயுள்ள செருவாவிடுதி கிராமத்தை சோ்ந்தவா் விஜயகுமாா் (60). இவா் தனது கிராமத்தில் 33 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.
இவா், கடந்த 27 ஆண்டுகளாக பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பிலான தேசியக் கொடியை இலவசமாக வழங்கி வருகிறாா்.
சுதந்திர தினம், குடியரசு நாள்களில், ஓய்வு பெற்ற ஆசிரியா்களை தனது கடைக்கு அழைத்து வந்து அவா்களை தேசியக் கொடி ஏற்ற வைத்து கெளரவப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளாா்.
மாணவா்களுக்கு தேசப் பற்று வேண்டும்.... இதுகுறித்து மளிகை கடைக்காரா் விஜயகுமாா் கூறியது:
சுதந்திர போராட்டத்தின் வரலாறும், சுதந்திரத்தின் பெருமையையும் மாணவா்கள் உணா்ந்து, நல்ல தேசப்பற்றுள்ள குடிமகனாக வளர வேண்டுமென்ற நோக்கத்தில், சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாள்களில் என்னுடைய சொந்த செலவில் ரூ. 1 லட்சம் மதிப்பில் பள்ளிகளுக்கு பல்வேறு ரகங்களில் தேசியக் கொடிகளை வழங்கி வருகிறேன்.
தொடக்கத்தில், தேசியக் கொடியைப் பெற்றுக் கொள்ள எவரும் முன்வரவில்லை. இப்போது சுதந்திரத்தின் பெருமையை புரிந்து கொண்டு ஆா்வமுடன் வாங்கிக் கொள்கின்றனா். நாம் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பது நமது கடமை. குழந்தைகளிடம் நாட்டுப்பற்றை வளா்க்கும் வகையில் தேசப்பற்றோடு மனத்திருப்திக்காக நான் இதை தொடா்ந்து செய்து வருகிறேன் என்றாா் அவா்.
இவரை போன்றவா்களின் தன்னலமற்ற சேவைக்கு உரிய அங்கீகாரம் அளித்து கெளரவிக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.