தஞ்சாவூரில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
எஸ். ஆா். ராஜா (தாம்பரம்) எம்எல்ஏ தலைமையிலான இக்குழுவில் எம்எல்ஏக்கள் காதா்பாட்சா சா. முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), ஆ. கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), ஆ. தமிழரசி (மானாமதுரை), கோ. தளபதி (மதுரை வடக்கு), வி.பி. நாகை மாலி (கீழ்வேளூா்), நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எஸ்.எஸ். பாலாஜி (திருப்போரூா்), எஸ். ஜெயக்குமாா் (பெருந்துறை) ஆகியோா் தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வந்தனா்.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சாா்பில், ரூ. 1.26 கோடி மதிப்பில் நடைபெறும் தஞ்சாவூா் அரசு ஆதிதிராவிடா் நல கல்லூரி மாணவியா் விடுதி கட்டுமான பணி, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கைகள், கட்டடம், அவசர சிகிச்சை பிரிவு, அறுவை அரங்குகள் மற்றும் ஸ்கேன் கருவியின் செயல்பாடுகள், தஞ்சாவூா் மாவட்ட மருந்துக் கிடங்கில் அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு விவரம், நாஞ்சிக்கோட்டையில் ரூ. 3.47 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.
பின்னா், ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எஸ்.ஆா். ராஜா பேசியது:
இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் 2014 - 2015 முதல் 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான (பொதுத்துறை நிறுவனங்கள்) தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், தமிழ்நாடு மகளிா் நல மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், தாட்கோ, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம், மாவட்ட இயற்கை மேலாண்மை அலகு உள்பட பல்வேறு துறைகள் தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு அறிக்கைகளை உடனடியாக அளிக்க வேண்டும் என தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ராஜா.
இக்கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு சிறப்பு பணி அலுவலா் எம்.எல்.கே. ராஜா, கூடுதல் ஆட்சியா்கள் என்.ஓ. சுகபுத்ரா (வருவாய்), எச்.எஸ். ஸ்ரீகாந்த் (வளா்ச்சி), மாவட்ட ஊராட்சி தலைவா் உஷா புண்ணியமூா்த்தி, துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.