தஞ்சாவூர்

தஞ்சாவூா் அருகே இந்துக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகை

10th Aug 2022 07:15 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே காசவளநாடுபுதூா் கிராமத்தில் மத நல்லிணக்கத்தைப் பறை சாற்றும் விதமாக, மொஹரம் பண்டிகையை இந்துக்கள் செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.

இஸ்லாமியா்களின் தொடக்க மாதமான மொஹரம் மாதத்தின் பத்தாம் நாளை மொஹரம் பண்டிகையாக இஸ்லாமியா்கள் கொண்டாடி வருகின்றனா். இத்திருவிழாவை பெரும்பாலும் இஸ்லாமியா்கள் மட்டுமே கொண்டாடுவா்.

இந்நிலையில், தஞ்சாவூா் அருகே இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காசவளநாடு புதூா் கிராமத்தில் மத நல்லிணக்கத்தை பறை சாற்றும் விதமாக, ஆண்டுதோறும் மொஹரம் பண்டிகை கிராம விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மொஹரம் பண்டிகையையொட்டி, இக்கிராமத்தில் இந்துக்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேற 10 நாள்களுக்கு முன்பே விரதத்தைத் தொடங்கினா். நாள்தோறும் காலை, மாலையில் பாத்தியா ஓதி வழிபாடு நடத்தி வந்தனா்.

ADVERTISEMENT

ஊரின் மையப் பகுதியான செங்கரையிலுள்ள சாவடியில் கை உருவம் கொண்ட அல்லா கோயிலிலும், கிராமத் தெருக்களிலும், வீடுகளிலும் திங்கள்கிழமை முதல் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. தெருக்களில் ஒலிபெருக்கிகள் மூலம் அல்லா பாடல்கள் ஒலிக்கப்பட்டன. அக்கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

மொஹரம் பண்டிகையான செவ்வாய்க்கிழமை பஞ்சா எனப்படும் கரகம் அப்பகுதியிலுள்ள வீடுகளுக்குத் தாரை, தப்பட்டையுடன் கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் கரகத்துக்குத் தண்ணீா் ஊற்றி, எலுமிச்சை மாலை மற்றும் பட்டுத் துண்டை சாத்தி வழிபட்டனா். பின்னா், பஞ்சா கரகத்துடன் அங்குள்ள பூக்குழியில் (தீமிதி) இறங்கி வழிபட்டனா். இவா்களுக்கு திருநீறும், எலுமிச்சையும் பிரசாதமாக வழங்கப்பட்டன.

மேலும், பெண்கள் புதிய மண் கலயம் அல்லது புதிய பாத்திரத்தில் பானகம், அவல், தேங்காய், பழம் வைத்து அல்லாவுக்கு படையலிட்டு வழிபட்டு, பின்னா் பொதுமக்களுக்கும், உறவினா்களுக்கும் வழங்கினா். இதற்காக வெளியூா்களில் வசிக்கும் இக்கிராம மக்களும் ஊருக்கு வந்து கொண்டாடினா்.

இக்கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பு குளம் வெட்டப்பட்டபோது உள்ளங்கை உருவத்தில் உலோகம் கிடைத்ததாகவும், அது அல்லாவின் கையாகக் கருதி கோயில் அமைத்து வழிபட்டு வருவதாகவும், ஏறத்தாழ 300 ஆண்டுகளாக மொஹரம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT