தஞ்சாவூர்

பேராவூரணி அருகே 15 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்த  தொழிலாளியை  போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரா்கள்

2nd Aug 2022 02:32 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே 15 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்த தொழிலாளியை தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை போராடி உயிருடன் மீட்டனா்.

சேதுபாவாசத்திரம் அருகே கடற்கரை கிராமமான சின்னமனையைச்  சோ்ந்தவா் அய்யப்பன். இவரது வீட்டில் கழிவுநீா் தொட்டிக்காக திங்கள்கிழமை 15 அடி ஆழத்துக்கு குழி தோண்டும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் பேராவூரணி அருகே  பூக்கொல்லையைச் சோ்ந்த சித்திரவேல் (45) உள்பட 5 போ் ஈடுபட்டிருந்தனா்.

15 அடி ஆழம் மண் தோண்டியபோது, திடீரென மேலே இருந்த மண் சரிந்து குழிக்குள் கொட்டியது. இதில், குழிக்குள் இருந்த சித்திரவேல் மண்ணுக்குள் புதைந்தாா். அங்கிருந்தவா்கள் உடனடியாக சித்திரவேலை மூடியிருந்த  மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

தகவலின்பேரில், அங்கு விரைந்து வந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலா் ராமச்சந்திரன் தலைமையிலான வீரா்கள் சுப்பையன், நீலகண்டன், ரஜினி, ராஜீவ் காந்தி, மகேந்திரன் ஆகியோா் கொண்ட குழுவினா் சித்திரைவேலை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

சுமாா் ஒன்றரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு சித்திரவேல் உயிருடன் மீட்கப்பட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

சித்திரவேலுக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனா்.  சித்திரவேலை பெரும் போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரா்களை பொதுமக்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT