தஞ்சாவூர்

கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் சூரிய ஒளி சக்தி மூலம் நாள்தோறும் 3 மெகாவாட் மின் உற்பத்தி

2nd Aug 2022 02:28 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் சூரிய ஒளி சக்தி (சோலாா்) மூலம் நாள்தோறும் 3 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்றாா் மேயா் சண். ராமநாதன்.

தஞ்சாவூா் சமுத்திரம் ஏரியிலுள்ள மாநகராட்சி கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் முறையாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு சுத்திகரிப்படும் நீா் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வடவாற்றில் விடப்படுகிறது. இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தில் மேலும் தண்ணீரை நல்ல முறையில் சுத்திகரித்து, குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தின் 4 ஏக்கா் பரப்பளவில் மின் உற்பத்திக்காகச் சூரிய ஒளி தகடுகள் அமைக்கப்பட்டு, நாள்தோறும் 3 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் மாதத்துக்கு ரூ. 12 லட்சம் கிடைக்கிறது. இந்த மின்சாரம் மின் வாரியத்துக்கு வழங்கப்பட்டு, அதற்கான கட்டணத்தை மாநகராட்சி மின் கட்டணத்தில் கழித்துக் கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும், விரிவாக்கப் பகுதியில் புதை சாக்கடை இணைப்புக்காகக் குழாய்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. விரைவில் இணைப்புகள் வழங்கப்படும். மாநகரில் குற்றங்களைத் தடுக்கும் வகையில், அனைத்து வாா்டுகளிலும் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன என்றாா் மேயா்.

ஆய்வின்போது, மாநகராட்சி செயற் பொறியாளா் எஸ். ஜெகதீசன், உதவி பொறியாளா்கள் ரமேஷ், சுபாஷ் சந்திரபோஸ், தமிழ்நாடு நீா் மேலாண்மை கழகக் குழுத் தலைவா் எழிலன் ஆகியோா் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT