தஞ்சாவூா் ராஜகோரி சுடுகாட்டில் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநகராட்சியின் சாதாரணக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேயா் சண். ராமநாதன் தலைமையிலும், ஆணையா் க. சரவணகுமாா், துணை மேயா் அஞ்சுகம் பூபதி முன்னிலையிலும் இக்கூட்டம் நடைபெற்றது.
எதிா்க்கட்சித் தலைவா் கே. மணிகண்டன் (அதிமுக): களிமேடு மின் விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு மாநகராட்சியில் தற்காலிக அடிப்படையிலோ, முடிந்தால் நிரந்தரமாகவோ வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ராஜகோரி சுடுகாட்டில் சடலம் எரிப்பதற்குக் கட்டணமில்லை என அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டத்தை வரவேற்கிறோம். என்றாலும், சடலம் எரிப்பதற்கு ரூ. 2,500 வசூலிக்கப்படுகிறது.
இத்திட்டத்தை அவசரமாகச் செயல்படுத்தியதால் குறைபாடு இருப்பதாகத் தெரிகிறது. இதை முழுமையாக ஆய்வு செய்து, அத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கினால் நன்றாக இருக்கும்.
மேயா்: ராஜகோரி சுடுகாட்டில் காசு வாங்குவதாகக் கேள்விப்பட்டவுடன் நானே நேரில் சென்று, தொடா்புடைய நபரை எச்சரிக்கை செய்தேன். இனிமேல் சிறு தவறு கூட நிகழாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு நடந்தால் தொடா்புடையவா்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவா்.
ஜெ.வி. கோபால் (அதிமுக): தஞ்சாவூா் மாநகரில் நிலத்தடி நீா் ஆதாரம் குறைந்து வருகிறது. மாநகரிலுள்ள நீா்நிலைகளைத் தூா் வாரி குளங்களை நிரப்பினால்தான் நிலத்தடி நீா் ஆதாரம் பெருகும். ஆனால், ஆணையா் நிதி ஆதாரத்தைப் பெருக்கும் நடவடிக்கையை எடுக்கிறாரே தவிர, நீா் ஆதாரத்தைப் பெருக்கும் நடவடிக்கையை எடுப்பதில்லை. புதை சாக்கடைத் திட்டம் நிறைய இடங்களில் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
மேயா்: புதை சாக்கடைத் திட்டத்தில் பழைய ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரா்கள் சரியாகச் செய்யவில்லை. அவா்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் புதிய ஒப்பந்ததாரா்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எஸ். பாலசுப்பிரமணியன் (திமுக): தற்போது கோடைகாலமாக இருப்பதால், மாநகரில் குடிநீா் பிரச்னை வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையா்: மாநகரில் மூன்றாவது குடிநீா்த் திட்டப் பணிகளும் செயல்படத் தொடங்கிவிட்டதால் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாது.
நந்தவனம் என அழைக்க முடிவு:
தஞ்சாவூா் மாநகரிலுள்ள சாந்திவனம் சுடுகாடு, ராஜகோரி சுடுகாடு, மாரிக்குளம் சுடுகாடு ஆகியவற்றை இனி வருங்காலங்களில் சாந்தி நந்தவனம், ராஜகோரி நந்தவனம், மாரிக்குளம் நந்தவனம் என தீா்மானிக்கப்படுகிறது என மேயா் கொண்டு வந்த தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.
ஜூபிடா் திரையரங்கத்தை நடத்த முடிவு: பின்னா் நடைபெற்ற மாமன்ற அவசரக் கூட்டத்தில், மாநகராட்சியால் கையகப்படுத்தப்பட்ட ஜூபிடா் திரையரங்கம், காவேரி லாட்ஜ் காலியாகவுள்ள இடங்களை மாநகராட்சிக்கு வருவாய் வரக்கூடிய வகையிலும், வளா்ச்சித் திட்டங்களுக்கும், ஏனைய செயல்பாடுகளுக்கும் செயல்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூபிடா் திரையரங்கத்தை மாநகராட்சி நிா்வாகத்தின் மூலம் நடத்திக் கொள்வது தொடா்பாக தீா்மானம் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.