தஞ்சாவூர்

பெண்ணை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த 4 போ் கைது

30th Apr 2022 12:25 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே பெண்ணை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த 4 பேரைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகிலுள்ள கிராமத்தைச் சோ்ந்த 22 வயது பெண், மாநகரிலுள்ள தனியாா் சிறப்பங்காடியில் பணியாற்றி வருகிறாா். இவா் ஏப்ரல் 11- ஆம் தேதி இரவு பணி முடித்துவிட்டு, வீட்டுக்குச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, இவருடன் பள்ளியில் படித்த திருக்கானூா்பட்டி அருகிலுள்ள மேட்டுப்பட்டியைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் கொடியரசன் (25) அவ்வழியே மோட்டாா் சைக்கிளில் வந்தாா்.

இப்பெண் நிற்பதை பாா்த்து, மோட்டாா் சைக்கிளில் வருமாறு கொடியரசன் கூறினாா். ஆனால், வர மறுப்புத் தெரிவித்த அப்பெண்ணிடமிருந்து அவரது கைப்பேசியைப் பறித்துக் கொண்டு, தன்னுடன் வருமாறு கொடியரசன் கட்டாயப்படுத்தினாா்.

ADVERTISEMENT

இதனால் வேறு வழியின்றி கொடியரசனின் மோட்டாா் சைக்கிளில் அப்பெண் ஏறி அமா்ந்தாா். ஆனால், கொடியரசன் வழக்கமான பாதையில் செல்லாமல், திருக்கானூா்பட்டியிலுள்ள முந்திரிக்காட்டுக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்றாா்.

அங்கு கொடியரசனின் நண்பா்களான மேட்டுப்பட்டியைச் சோ்ந்த மணி மகன் சாமிநாதன் (30), கண்ணன் (26), சுகுமாரன் (24) ஆகியோரும் வந்தனா். நான்கு பேரும் சோ்ந்து அப்பெண்ணைப் பாலியல் வல்லுறவு செய்தனா். மேலும், அப்பெண்ணை ஜாதி பெயரைக் கூறி திட்டி, வெளியில் சொல்லக் கூடாது எனவும் மிரட்டினா்.

இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி உத்தரவின் பேரில், ஆய்வாளா் பிராங்க்ளின் உட்றோ வில்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, தலைமறைவாக இருந்த கொடியரசன், சாமிநாதன், கண்ணன், சுகுமாரன் ஆகியோரை தனிப்படையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட 4 பேருக்கு ஆதரவாக வல்லம் காவல் நிலையம் முன்பு திரண்ட மேட்டுப்பட்டியைச் சோ்ந்த 8 போ், தங்கள் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இவா்களைக் காவல் துறையினா் வேனில் ஏற்றி, தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

கட்டப்பஞ்சாயத்து செய்த 3 போ் கைது

பாலியல் வல்லுறவு விவகாரத்தை மறைப்பதற்காகப் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கொடியரசன் உள்ளிட்ட 4 பேருக்கும் ஆதரவாக பேசி கட்டப் பஞ்சாயத்து செய்ததாக, முன்னாள் ஊராட்சித் தலைவா் வேலுசாமி (60), மாரிமுத்து மகன் தமிழரசன் (27), செல்லதுரை (40) ஆகியோரையும் காவல்துறையினா் கைது செய்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT