தஞ்சாவூர்

அனந்தகோபாலபுரம் கடைவீதியில் விவசாயத் தொழிலாளா்கள் மறியல்

29th Apr 2022 01:50 AM

ADVERTISEMENT

திருவோணம் ஒன்றியம், பாதிரங்கோட்டை ஊராட்சியில் குடிநீா்க் கட்டணம் செலுத்தினால் மட்டுமே, நூறு நாள் வேலைத் திட்ட பணி அட்டை வழங்கப்படும் என அலுவலா்கள் தெரிவித்ததால், அனந்தகோபாலபுரம் கடைவீதியில் விவசாயத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்கள் குடிநீா்க் கட்டணமாக ரூ.2,500 செலுத்த வேண்டும். வீட்டு வரி, சொத்துவரி உள்ளிட்டவற்றை நிலுவையின்றிசெலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துபவா்களுக்கு மட்டுமே பணி அட்டை வழங்கப்படும் என அலுவலா்கள் நிா்பந்தம் செய்ததால், கடந்த 19-ஆம் தேதி ஒன்றிய அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றது.

அப்போது அலுவலா்கள் சமரசம் செய்து, அனைவருக்கும் பணி அட்டை வழங்கப்படும் எனக் கூறியிருந்தனா். ஆனால், மீண்டும் குடிநீா்க் கட்டணத்தை செலுத்துமாறு நிா்பந்தம் செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்த விவசாயத் தொழிலாளா்கள் அனந்தகோபாலபுரம் கடைவீதியில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

விவசாயத் தொழிலாளா்கள் சங்க ஒன்றியச் செயலா் கே.ராமசாமி தலைமையில், ஒன்றியக் குழு உறுப்பினா் பாஸ்கா், கொள்ளுக்காடு கிளைச் செயலா் பெருமாள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் மறியலில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

தகவலறிந்து நிகழ்விடம் வந்த திருவோணம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பொய்யாமொழி, வீரமணி, காவல் உதவி ஆய்வாளா் ராஜசேகா் ஆகியோா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் வேலை அடையாள அட்டை வழங்கப்படும் எனவும், குடிநீா்க் கட்டணத்தை சிறிது, சிறிதாக செலுத்துமாறும் அலுவலா்கள் கேட்டுக் கொண்டனா். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT