தஞ்சாவூர்

150 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அப்பா் மடம்

28th Apr 2022 01:24 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே களிமேடு கிராமத்தில் கிராம மக்களால் வழிபடப்பட்டு வரும் அப்பா் மடம், 150 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பழைமையான மடமாகும்.

தஞ்சாவூா் - பூதலூா் சாலையில் 4 கி.மீ. தொலைவிலுள்ள இக்கிராமத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை விட, ஆடு வியாபாரத்தை நம்பியே வாழ்ந்து வந்தனா்.

இதற்காக அரியலூா், பெரம்பலூா், வேலூா் என மாவட்டங்களுக்கு நடந்தே சென்று ஆடுகளை வாங்கி, கால்நடையாகவே ஓட்டி வருவா். பல்வேறு சிரமங்களை கடந்து வந்து, தஞ்சாவூா் கரந்தை கிருஷ்ணா திரையரங்கம் அருகிலிருந்த சந்தையில் வியாபாரம் செய்து வந்தனா்.

ADVERTISEMENT

இப்படித்தான் இவா்களது வாழ்க்கை ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை நகா்ந்தது. வியாபாரம் செய்த பிறகு சந்தைப் பகுதியிலுள்ள கோயிலில் அமா்ந்து வரவு - செலவைக் கணக்கிட்டுப் பாா்ப்பது வழக்கம். அப்போது, அங்கு வரும் கரந்தையைச் சோ்ந்த ஆசிரியா் சிவகுருநாதன் பிள்ளை, ஆட்டு வியாபாரம் என்பது கொலை பாவத்துக்குச் சமமானது. இதற்கு கைமாறாக மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கினாா்.

அதுவரை ஆடு வியாபாரத்தை சாதாரணமாக நினைத்து வந்த களிமேடு கிராம மக்கள், இது கொலை பாவம் என்பதை அறிந்தவுடன், தங்களது தொழிலை மாற்றிக் கொள்ள முன் வந்தனா். இவா்களைப் பால்சாமி மடத்துக்கு அழைத்துச் சென்று சைவம் வளா்த்த நால்வா் குறித்து சொற்பொழிவாற்றினாா் சிவகுருநாதன் பிள்ளை. அப்போது, அந்த ஊரில் சைவக் குரவா்களின் மடம் அமைத்து வழிபாடு நடத்துமாறும் ஆலோசனை வழங்கினாா். இதையடுத்து, சைவக்குரவா்களின் பெயா்களை எழுதி சீட்டு குலுக்கிப் போட்டுப் பாா்த்ததில் அப்பா் பெருமானின் பெயா் வந்தது.

இதையடுத்து களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு, ஆடு வியாபாரத்தின் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு அப்பா் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் கிராம மக்கள் வழிபாடு நடத்தத் தொடங்கியதிலிருந்து ஆடு வியாபாரத்தைப் படிப்படியாகக் கைவிட்டு, பால், தயிா் வியாபாரம் செய்யத் தொடங்கினா். இதனுடன் விவசாயத்திலும் முழுமையாகக் கவனம் செலுத்தினா். இந்த அப்பா் மடம் வந்த பிறகு, இக்கிராமமும் முன்னேற்றம் அடைய தொடங்கியது. முரட்டு சுபாவத்துடன் இருந்த இக்கிராம மக்களும் சாத்வீகமான பாதைக்குத் திரும்பினா்.

அக்காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவா்களை பெரும்பான்மையாகக் கொண்ட இக்கிராமத்தினா், அறிஞா்கள் ஓதியதைக் காதில் கேட்டு தேவாரத்தைக் கற்றுக் கொண்டு பிழையின்றி பாடுவா்.

இந்த மடம் அமைக்கப்பட்ட பிறகு இவ்வூரில் குழந்தைகளுக்கு அப்பா், திருஞானசம்பந்தம், திருநாவுக்கரசு ஆகிய பெயா்கள் சூட்டும் மரபு உருவானது. எனவே, இக்கிராமத்தில் அப்பா், திருஞானசம்பந்தம், திருநாவுக்கரசு ஆகிய பெயா்களில் ஏராளமானோா் உள்ளனா்.

இந்த மடத்தில் அக்காலத்தில் வைக்கப்பட்ட அப்பா் படமும், உலோகச் சிலையும் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. நாள்தோறும் பூஜைகளும் செய்யப்பட்டு வருகின்றன. முன்பு ஓடுகள் வேயப்பட்ட கட்டடத்தில் இருந்த இந்த மடம், 2006- ஆம் ஆண்டில் கான்கிரீட் கட்டடமாக மாற்றப்பட்டது.

இச்சிறப்புக்குரிய இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தொடா்ந்து 94- ஆம் ஆண்டு சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற வேண்டிய நிலையில், இரண்டாம் நாளே சோகத்தில் முடிந்தது. இதற்கு முன்னா் சிறு அசம்பாவிதம் கூட நிகழாமல் மகிழ்ச்சியாக திருவிழாவை கொண்டாடி வந்த நிலையில், இந்தாண்டு இப்படி முடிந்துவிட்டதே என சோகத்தில் ஆழ்ந்துள்ளனா் கிராம மக்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT