தஞ்சாவூர்

தூா்வாரும் பணிகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க ஆட்சியா்களுக்கு உத்தரவு

27th Apr 2022 04:45 AM

ADVERTISEMENT

தூா் வாரும் பணிகளை ட்ரோன் மூலம் கண்காணிக்க ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் நீா் வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப் சக்சேனா.

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகிலுள்ள ஆச்சாம்பட்டி பாலையா வாய்க்காலில் மேற்கொள்ளப்படும் தூா் வாரும் பணியை செவ்வாய்க்கிழமை மாலை பாா்வையிட்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் வரக்கூடிய கோரிக்கைகள் அடிப்படையில் தூா் வாரப்படும் வாய்க்கால்கள் தோ்வுசெய்யப்பட்டு, அவற்றில் தற்போது பணிகள் நடைபெறுகின்றன.

இன்னும் சில இடங்களில் தூா் வாரும் பணி மேற்கொள்ளப்படுவதற்கான தேவை இருக்கிறது. அதையும் இருக்கிற நிதியிலிருந்து செய்யவோ அல்லது கூடுதலாக நிதி பெறவோ முயற்சி செய்யப்படும்.

ADVERTISEMENT

காவிரியைச் சாா்ந்த வாய்க்கால்கள், வடிகால்கள் என மொத்தம் 29,000 கி.மீ. தொலைவுக்கு உள்ளன. இதில், நிகழாண்டு கிட்டத்தட்ட 5,000 கி.மீ. தொலைவுக்கு எடுத்து, தூா் வாரும் பணி செய்யப்படுகிறது. தொடா்ந்து படிப்படியாக மற்ற இடங்களிலும் தூா் வாரப்படும்.

நிகழாண்டில், எங்கெங்கு தண்ணீா் சரியாகச் செல்லாத இடங்கள், தண்ணீா் தேங்குமிடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தூா் வாரப்படுகிறது. மேலும், துாா் வாரும் பணிகளை ட்ரோன் மூலம் கண்காணிக்குமாறு ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின் போது அரசு முதன்மைச் செயலரும், தூா் வாரும் பணி மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான ச. விஜயகுமாா், மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், பொதுப்பணித் துறையின் மண்டலத் தலைமைப் பொறியாளா் எஸ். ராமமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT