சித்திரை மாத பிறப்பையொட்டி, தஞ்சாவூா் அருகே கிராமங்களிலுள்ள வயல்களில் நல்லோ் பூட்டி விவசாயிகள் வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்தினா்.
தஞ்சாவூா் அருகிலுள்ள கிராமங்களில் சித்திரைப் பிறப்பையொட்டி, வயல்களில் நல்லோ் கட்டி விவசாயப் பணிகளைத் தொடங்குவது வழக்கம்.
இதன்படி, திருவையாறு அருகிலுள்ள பருத்திக்குடி கிராமத்தில் நல்லோ் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விளைநிலத்தில் கணபதி பூஜை, சூரியநாராயண பூஜை, வருண பூஜை, பூமி பூஜை செய்து வழிபட்டனா். அப்போது, விவசாயத்துக்குப் பயன்படும் நெல், பயறு, எள் போன்ற தானியங்களை வயல்களில் தெளித்தனா். மேலும் அதிக மகசூல் கிடைக்கவும், நீா் நிலைப் பெருகவும் பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் ஏா்கள் இல்லாததால், டிராக்டா்கள் மூலம் உழுதனா். இதில் ஏராளமான விவசாயிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபட்டனா்.
இதேபோல, குருங்குளம், தோழகிரிப்பட்டி, தங்கப்ப உடையான்பட்டி, அற்புதாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் ஒன்று திரண்டு சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வயல்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனா். இதில் மாடுகளை ஏா் பூட்டி வயலில் உழுதனா். பெண்கள் நெல் மணிகளைத் தூவினா்.