தஞ்சாவூர்

திருவையாறு அருகே லாரி மோதியதில் அரசுப் பேருந்து நடத்துநா் பலி: உறவினா்கள் மறியல்

14th Apr 2022 01:48 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே புதன்கிழமை மாலை மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.

திருவையாறு அருகே செம்மங்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மணிகண்டன் (40). இவா் அரசுப் போக்குவரத்து கழகத்தின் தஞ்சாவூா் முதலாவது கிளை பணிமனையில் பேருந்து நடத்துநராகப் பணிபுரிந்து வந்தாா்.

இவா் புதன்கிழமை மாலை விளாங்குடி சாலையிலுள்ள பெட்ரோல் பங்கில் தனது மோட்டாா் சைக்கிளுக்கு பெட்ரோலை நிரப்பிவிட்டு, சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, இந்த மோட்டாா் சைக்கிள் மீது அரியலூரிலிருந்து திருவையாறு நோக்கி எம். சாண்ட் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையறிந்த மணிகண்டனின் உறவினா்கள், பொதுமக்கள் நிகழ்விடத்தில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், அப்பகுதியில் அரசு மதுபானக் கடை இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், அதை வேறு இடத்துக்கு மாற்றுமாறும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். இதனால், அப்பகுதியில் சுமாா் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தகவலறிந்த திருவையாறு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று, இக்கோரிக்கைகள் குறித்து ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இறந்த மணிகண்டனுக்கு மனைவி அருட்செல்வி (36), மகள் மாலினி (19), மகன் மதன் (16) உள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT