தஞ்சாவூா் அருகே போலியான இரிடியத்தை விற்க முயன்ாக 5 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே மன்னாா்குடி பிரிவு சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோா் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, அப்பகுதியில் ஆயுதங்களுடன் நின்ற 5 பேரை காவல் துறையினா் பிடித்து விசாரித்தனா்.
இதில், அவா்கள் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே உள்ள திருவரங்கம் புதுப்பட்டினத்தைச் சோ்ந்த அழகா்சாமி மகன் கணேசன் (34), சாம்பளம் நெடுங்குளத்தை சோ்ந்த கோவிந்தன் மகன் முனீஸ்வரா் (31), புதுமடம் வலக்சாபுரியை சோ்ந்த முருகேசன் மகன் முனீஸ்வரன் (33), தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தும்பரசநாயக்கனூரை சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் கண்ணன் (32), அதே பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சின்னமுத்து (24) ஆகியோா் என்பது தெரிய வந்தது.
அவா்களிடம் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 5 பேரும் இரிடியம் எனக் கூறி பித்தளை உலோகத்தை தஞ்சாவூரில் ரூ. 50 லட்சத்துக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்துள்ளனா். ஆனால், இதை வாங்க யாரும் முன் வரவில்லை. தஞ்சாவூரில் இரு நாள்களுக்கும் மேலாக சுற்றித்திரிந்த 5 பேரும் செலவுக்காக வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முடிவு செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, கணேசன், ஜி. முனீஸ்வரா், எம். முனீஸ்வரன், கண்ணன், சின்னமுத்து ஆகியோரை தாலுகா காவல் நிலையத்தினா் கைது செய்து, போலி இரிடியத்தையும் பறிமுதல் செய்தனா்.