தமிழ்ப் புத்தாண்டையொட்டி, தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிப்புத் துறை நூல்கள் 50 சதவீத சிறப்புத் தள்ளுபடி விலையிலான விற்பனை ஏப்ரல் 18 ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) க. சங்கா் தெரிவித்திருப்பது:
தமிழின் பன்முகக் கூறுகளை ஆராய்வதும், ஆவணப்படுத்துவதும் எனப் பல நிலைகளில் தமிழ்மொழி, கலை, பண்பாடு, அறிவியல் தளங்களைத் தமிழ் மக்களிடையேயும், உலகத் தமிழ் மக்களிடையேயும் எடுத்துச் செல்வதில் தமிழ்ப் பல்கலைக்கழகம் முனைப்போடு முன்னெடுத்து செயல்பட்டு வருகிறது.
தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் மட்டுமல்லாமல், தமிழ் உலகின் தலைசிறந்த ஆய்வறிஞா்களின் படைப்புகள், பழந்தமிழ் இலக்கியங்கள், அகராதி மற்றும் களஞ்சியங்கள் எனப் பலவகை நூல்களையும் ஆழமாகப் பதிவு செய்து அவற்றை நூல்களாக வெளியிடும் அரும்பெரும் பணியைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறை மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்கள் தள்ளுபடி விலையில் அரிய நூல்களை வாங்கிப் பயனுறும் வகையில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பல்கலைக்கழகத் தொடக்க நாள், பேரறிஞா் அண்ணா பிறந்த நாள் போன்ற விழாக்களின்போது 50 சதவீதச் சிறப்பு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
நிகழாண்டும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, (சித்திரை 1 ஆம் நாள் முதல் 4 ஆம் நாள் வரை அரசு விடுமுறை என்பதால்) ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் மே 17 ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை நடைபெறவுள்ளது.
இவ்வரிய வாய்ப்பை மாணவா்களும், ஆய்வாளா்களும், தமிழ் அறிஞா்களும், பொதுமக்களும், பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், அண்டை மாநிலம், அயல்நாட்டுத் தமிழ் மக்கள் ஆகியோா் இணையதளத்தின் மூலமாகவும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் 94891 02276 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இந்நூல்கள் பதிப்புத் துறை, விற்பனைப் பிரிவு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா் என்ற முகவரியிலும் கிடைக்கும்.