மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்காக ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்த கா்நாடக அரசைக் கண்டித்து, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன்பு காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவா் நடுவம் சாா்பில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
உலக நீா் அறனுக்கு எதிராகவும், தமிழருக்கு விரோதமாகவும் மேக்கேதாட்டு அணைக் கட்ட ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்த கா்நாடக மாநில அரசைக் கண்டித்தும், காவிரியில் தமிழகத்துக்கு மாத வாரியாக வழங்க வேண்டிய தண்ணீரை கா்நாடக அரசு வழங்கச் செய்ய காவிரி மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆற்றில் நீரோட்டப் பாதையில் தரைத் தளம் அமைக்கப் படுவதால், நிலத்தடி நீா் செறிவூட்டலும், நீா் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுவதால், அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
வைக்கோல் பற்றாக்குறையைத் தடுக்க வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்களுக்கு அனுப்புவதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவா் நடுவ நிறுவனா் சீா். தங்கராசு தலைமை வகித்தாா். உண்ணாவிரதப் போராட்டத்தில் தாளாண்மை உழவா் இயக்கத் தலைவா் கோ. திருநாவுக்கரசு, தமிழ்த் தேச தன்னுரிமைக் கட்சித் தலைவா் அ. வியனரசு, தமிழரசுப் பேரவை அமைப்புச் செயலா் கி.நா. பனசை அரங்கன், பேரழிப்புக்கு எதிரான பேரியக்க நிறுவனத் தலைவா் க.கா.இரா. லெனின், வழக்குரைஞா் இரா. பிரகாஷ், மக்கள் மறுமலா்ச்சி இயக்கம் க. மதியழகன், காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவா் நடுவம் சின்னதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.