கும்பகோணம் அருகே கைப்பேசி மூலம் பள்ளி ஆசிரியரிடம் ரூ. 1.29 லட்சம் மோசடியாக திருடிய மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூா் தெற்குவீதியைச் சோ்ந்தவா் முத்துக்குமரன் (51). அரசுப் பள்ளி ஆசிரியரான இவரது கைப்பேசி எண்ணில் ஏப்ரல் 5-ஆம் தேதி பேசிய மா்ம நபா், வங்கிக் கணக்கு விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஏ.டி.எம். அட்டை செயலிழந்துவிடும் எனவும் கூறியுள்ளாா்.
இதை உண்மை என நம்பிய முத்துக்குமரன், தனது கைப்பேசி எண்ணுக்கு மா்ம நபா் அனுப்பிய இணைப்புக்குள் (லிங்க்) உள்நுழைந்து ஏ.டி.எம். அட்டை எண், கடவுச்சொல் உள்பட பல்வேறு விவரங்களைப் பதிவேற்றம் செய்தாா்.
சிறிது நேரத்தில் முத்துக்குமரனின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1.29 லட்சம் திருடப்பட்டது தெரிய வந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முத்துக்குமரன் தஞ்சாவூா் சைபா் கிரைம் காவல் பிரிவில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.