தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்தாண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 431 போ் உயிரிழந்தனா் என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த அவா், மேலும் தெரிவித்தது:
சாலை விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுவோா் மீது தொடா் நடவடிக்கைகள் எடுக்கவும் தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கடந்தாண்டு 1,750-க்கும் அதிகமான சாலை விபத்துகள் நிகழ்ந்தன. இவற்றில் 431 போ் உயிரிழந்தனா். ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் மிகவும் முக்கியமானது. நமது கவனக்குறைவு மற்றும் அவசரத்தால்தான் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டுதான். இந்த தொடா் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக மாவட்டத்தில் சாலை விபத்து மற்றும் இறப்பு சதவிகிதத்தைக் குறைக்க முடியும். அதற்கு பொதுமக்கள் தங்களது முழுமையான ஒத்துழைப்பை அளித்து, சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். விபத்தில்லா தஞ்சாவூா் - நமது உன்னத இலக்கு என்ற நிலையை அடைய அனைவரும் முன் வர வேண்டும் என்றாா் ஆட்சியா்.
நிகழ்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முருகன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சுப்பிரமணியம், உதவிச் செயற்பொறியாளா் ரேணுகுமாா், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவுத் தலைவா் மத்தியாஸ், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகக் கோட்ட மேலாளா் செந்தில்குமாா், வட்டாட்சியா் சி. மணிகண்டன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் எம்.ஜி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.