மாவட்ட அளவிலான விழிப்புணா்வுப் போட்டிகளில் வென்ற இரு மாணவிகளை பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலா் பாராட்டி, பரிசுத் தொகையை வழங்கினாா்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தஞ்சாவூா் மாவட்ட நிா்வாகம் ஆகியவை இணைந்து, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களைத் தவிா்ப்பது குறித்த விழிப்புணா்வுப் போட்டியை பள்ளி மாணவா்களுக்காக நடத்தின.
இதில் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி கே. ரஹ்மத்நிஷா கட்டுரைப்போட்டியில் மாவட்ட அளவில் முதலிடத்தையும், ஆலத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி கே. அஸ்விதா விழிப்புணா்வு வாசகம் எழுதும் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றாா்.
மாணவி ரஹ்மத் நிஷாவுக்கு ரூ.3 ஆயிரமும், அஸ்விதாவுக்கு ரூ.1000-மும் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழை மாவட்டக் கல்வி அலுவலா் கு. திராவிடச்செல்வம் வழங்கிப் பாராட்டினாா். அப்போது, பள்ளித் துணை ஆய்வாளா் அருள்செல்வன், பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உடனிருந்தனா்.