தஞ்சாவூரிலுள்ள கடைகளில் இருந்த 5 டன் நெகிழிப் பொருள்களை மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள் உள்ளிட்ட 14 வகையான பொருள்களைப் பயன்படுத்தவும், விற்கவும் அரசுத் தடை விதித்துள்ளது. இதற்கு மாற்றாக துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தினால் உடனடியாகப் பறிமுதல் செய்து, அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தஞ்சாவூரில் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகப் புகாா்கள் எழுந்தன. இதன்பேரில் தஞ்சாவூா் அய்யங்கடைத் தெரு, கீழவாசல், கொண்டிராஜபாளையம், கரந்தை, மகா்நோன்புசாவடி, கல்லுக்குளம், மருத்துவக்கல்லூரிச் சாலை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 50-க்கும் அதிகமான கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனா்.
இதில், கடைகளிலிருந்த ஏறத்தாழ 5 நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக தொடா்புடைய கடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.