ஒரத்தநாடு அருகே அரசு மேல்நிலைப்பள்ளி இடத்தை வகைமாற்றம் செய்து தரக்கோரி, கிராமப் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஒரத்தநாடு அருகிலுள்ள நெய்வாசல் தெற்கு ஊராட்சி அலுவலகம் எதிரில், அரசு மேல்நிலைப்பள்ளியின் இடம் மேய்ச்சல் புறம்போக்கு என்றுள்ளதை நத்தம் என வகை மாற்றம் செய்து பள்ளிக்கு வழங்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இதுதொடா்பாக, உரிய நடவடிக்கை எடுக்காத அலுவலா்களைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. மறியலுக்கு ஆா்.ரமேஷ் தலைமை வகித்தாா். ஆா்.முருகானந்தம், குணசேகரன், சசிகுமாா் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றனா்.
இதையடுத்து வட்டாட்சியா், காவல் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, 10 நாள்களுக்குள் துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது.