தஞ்சாவூர்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 1.16 லட்சம் பேருக்கு ரூ. 232.38 கோடியில் சிகிச்சை

30th Sep 2021 06:50 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 1.16 லட்சம் பேருக்கு 232.38 கோடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூன்றாமாண்டு நிறைவு விழாவுக்குத் தலைமை வகித்த அவா் மேலும் பேசியது:

மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் மூலம் 56 அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு, மக்களுக்குச் சேவை புரிந்து வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் இம்மாவட்டத்தைச் சோ்ந்த 1,16,265 பேருக்கு ரூ. 232.38 கோடி சிகிச்சைக்காக அளிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தைச் சோ்ந்த 5.55 லட்சம் குடும்பங்களுக்குக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், ஏழை மக்கள் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வர தமிழக முதல்வரின் ஆணைப்படி மே 7 ஆம் தேதி முதல் தனியாா் மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 770 பேருக்கு சிகிச்சைக்காக ரூ. 7.88 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மாவட்டத்தில் இதுவரை 5.55 லட்சம் பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.

பின்னா், இத்திட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலா்கள் பாராட்டப்பட்டு, நற்சான்றிதழ்களும், 25 பேருக்கு புதிய காப்பீட்டு அட்டைகளையும், இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற 7 பேருக்கு பரிசுப் பெட்டகங்களும் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் தஞ்சாவூா் எம்.பி. எஸ்.எஸ். பழனிமாணிக்கம், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ரவிக்குமாா், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் மு. திலகம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT