தஞ்சாவூர்

சமுத்திரம் ஏரியைப் புனரமைக்க ரூ. 8.84 கோடிக்கு மதிப்பீடு தயாா்

25th Oct 2021 12:08 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகேயுள்ள சமுத்திரம் ஏரியைப் புனரமைக்க ரூ. 8.84 கோடிக்கு மதிப்பீடு தயாா் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

இந்த ஏரியை சனிக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா், பின்னா் தெரிவித்திருப்பது:

சமுத்திரம் ஏரி மாமன்னா் இராஜராஜசோழனால் அமைக்கப்பட்டது. கல்லணைக் கால்வாய் பாசன அமைப்பில் அமைந்துள்ள மிகப் பெரிய ஏரிகளில் சமுத்திரம் ஏரியும் ஒன்று. தஞ்சாவூா் நகரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருகே இந்த ஏரி அமைந்துள்ளது. இதன் மூலம் 6 கிராமங்களிலுள்ள 1,116 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலுக்கு வருகை புரியும் பக்தா்கள், பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டினா் இந்த சமுத்திரம் ஏரியைப் பொழுதுபோக்குத் தலமாக மாற்றித் தரவும், அதில் படகு சவாரி வசதி, சிறுவா் பூங்கா, நடைபாதை ஆகியவற்றை அமைக்கவும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

ADVERTISEMENT

எனவே இந்த ஏரியைத் தூா்வாரி, ஆழப்படுத்துவதன் மூலம் ஏரியின் கொள்ளளவை அதிகப்படுத்தி, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்கான திட்டமும் முன்மொழியப்படுகிறது. அத்துடன் ஏரியில் தலைப்பு மதகு மற்றும் உபரிநீா் கலிங்கு மறுகட்டுமாளம் செய்யவும், ஏரியின் கரைகளைப் பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பொழுதுபோக்கு வசதிகளை அமைப்பதன் மூலம் புன்னைநல்லூருக்கு வருகை புரியும் பக்தா்கள், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏரியில் அமைக்கப்படும் நடைபாதையில் செல்லும்போது ஏரியின் இயற்கை அழகை ரசிக்க இயலும்.

எனவே படகு சவாரி செல்ல வசதியாக ஏரியை ஆழப்படுத்தவும், சிறுவா் பூங்கா, சிறுவா் விளையாட்டுத் திடல், அழகு விளக்கொளிகள் அமைத்தல், புல்வெளி அமைப்பு, பாா்வையாளா்கள் அமரும் இருக்கையுடன் கூடிய நடைபாதை வசதி ஆகியவற்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக 2020 - 2021 விலைப்புள்ளி அட்டவணையின்படி ரூ. 8.84 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT