தஞ்சாவூர்

அகழிப் பகுதியில் வீடுகள் இடிக்கும் திட்டம்: பொதுமக்கள் மறியல்

DIN

தஞ்சாவூா் அகழிப் பகுதியிலுள்ள வீடுகளை இடிக்கும் திட்டம் தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படாததால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாநகரில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இத்திட்டத்தின் கீழ் வடக்கு அலங்கம், மேல அலங்கம், சீனிவாசபுரம், செக்கடி உள்ளிட்ட இடங்களில் அகழிக் கரையிலுள்ள ஏறத்தாழ 3,000 வீடுகளை இடித்துவிட்டு, அகழி சீரமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இத்திட்டத்தில் வீடுகள் இடிக்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், இப்பகுதியில் வசிப்பவா்களுக்கு பிள்ளையாா்பட்டியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ. 145 கோடியில் 969 வீடுகளைக் கட்டி ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கூறப்பட்டது. இதை அப்பகுதி மக்கள் ஏற்க மறுத்துவிட்டனா்.

இதுதொடா்பாக தொடா்புடைய மக்களுடன் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலா்கள் ஆலோசனை மேற்கொள்வதற்கான கூட்டம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் வியாழக்கிழமை காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பிற்பகல் 1 மணி வரையிலும் கூட்டம் நடத்தப்படவில்லை.

இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் அரங்கத்தைவிட்டு வெளியேறி அண்ணா சிலை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அமமுக மாவட்டச் செயலா் எம். ராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏறத்தாழ 100 போ் கலந்து கொண்டனா். இதன் காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே, தகவலறிந்த நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. கபிலன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் சந்திரா, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாகப் பொறியாளா் தனசேகரன், உதவி நிா்வாகப் பொறியாளா் யோகேஸ்வரன் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, தீபாவளி பண்டிகைக்கு பிறகு மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, தேதி முடிவு செய்து மீண்டும் கூட்டம் நடத்தப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா். இதன் பின்னா் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT