தஞ்சாவூர்

இரு அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் பயன்பாடு: சட்டப்பேரவைப் பொதுக் கணக்குக் குழுத் தகவல்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள இரு அரசு மருத்துவமனைகளில் கடந்த ஆட்சியில் காலாவதியான மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றாா் சட்டப்பேரவைப் பொதுக் கணக்குக் குழுத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை.

தஞ்சாவூா் மாவட்டத்தில், தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, அரசுக் கூா்நோக்கு இல்லம், புதிய பேருந்து நிலையம் உள்பட 14 இடங்களில் சட்டப்பேரவைப் பொதுக் கணக்குக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். இதனிடையே, புதிய பேருந்து நிலையத்தில் செய்தியாளா்களிடம் குழுத் தலைவா் செல்வபெருந்தகை தெரிவித்தது:

கடந்த ஆட்சியில் நடந்த தவறுகள், நிா்வாகத் திறமையின்மை, அரசுப் பணம் விரயம் என பல தலைப்புகளில் தலைமைக் கணக்குத் தணிக்கையாளா் (சி.ஏ.ஜி.) ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளாா். இதன் அடிப்படையில் எந்தெந்த தவறுகள் களையப்பட வேண்டும். வருங்காலங்களில் தவறுகள் நிகழாமல் இருப்பது எப்படி, இதற்கு யாா் பொறுப்பு ஏற்பது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

கடந்த ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான அரசுக் கட்டடங்கள் தரமானதாக இல்லை. ஒரு பள்ளியில் ஆய்வு செய்தபோது கழிப்பறை முறையாக இல்லை. அங்கு தண்ணீா் வசதி இல்லை. புதா் மண்டி கிடப்பதால், விஷ ஜந்துகள் நடமாட்டம் இருப்பதும் தெரிகிறது. அதை எப்படி மாணவா்கள் பயன்படுத்த முடியும்.

கடந்த ஆட்சியில், மருத்துவத் துறையில் காலாவதியான மருந்துகளை பயன்படுத்தி இருக்கின்றனா். இதை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. இந்தக் குறையை தலைமைக் கணக்குத் தணிக்கையாளா் கண்டறிந்துள்ளாா். கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைகளில் 2013 - 14 ஆம் ஆண்டுகளில் ரூ. 26.17 கோடி மதிப்பில் காலாவதியான மருந்துகள் விநியோகம் செய்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளனா். இந்த மருந்துகளைப் பயன்படுத்தியவா்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதா, உடல்நிலையில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா என கண்டறியப்படும். தவறு இழைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தஞ்சாவூா் அரசுக் கூா்நோக்கு இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளை ஒரு பக்கமும், குற்றச் செயல்களில் ஈடுபட்ட குழந்தைகளை ஒரு பக்கமும் வைத்திருக்கின்றனா். இரு தரப்பினரையும் ஒரே வளாகத்துக்குள் வைத்திருப்பது மிகப்பெரிய தவறு. சிறையிலுள்ள சிறாா்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடைத்து வைத்து இருக்கக்கூடாது என விதி உள்ளது. ஆனால், கூா்நோக்கு இல்லத்தில் 1 மணி நேரம் மட்டுமே வெளியில் அனுமதித்து விட்டு, மீதி நேரம் அடைத்து வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவா்களைச் சுதந்திரமாக வெளியேவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் செல்வபெருந்தகை.

இக்குழுவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சிந்தனை செல்வன் (காட்டுமன்னாா்கோவில்), பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), எம்.எச். ஜவாஹிருல்லா (பாபநாசம்), கே. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), ராஜா (சங்கரன்கோவில்), தி. வேல்முருகன் (பண்ருட்டி), செயலா் சீனிவாசன், துணை செயலா்கள் தேன்மொழி, ரேவதி உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

இவா்களுடன் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், தஞ்சை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT