ஈரப்பதத்தை பெரிதாகக் கணக்கில் எடுக்காமல், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகிலுள்ள ஒக்கநாடு கீழையூா் இறவைப் பாசன நீரேற்று நிலைய வாய்க்காலை புதன்கிழமை பாா்வையிட்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
சுமாா் 2200 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறும் இந்த இறவை நீரேற்று நிலையம், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி உள்ளது. கடந்த 1969-ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வா் மு. கருணாநிதியால் திறக்கப்பட்ட இந்த நீரேற்று நிலையத்தை சீரமைக்க, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பகுதியிலுள்ள வாரிகள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்டவற்றை சீரமைத்துத் தர வேண்டும். இதுகுறித்து கட்சியின் சாா்பில் தமிழக முதல்வரையும், நீா்ப்பாசனத் துறை அமைச்சரையும் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம்.
தற்போது மழைக்காலம் என்பதால் நெல் ஈரப்பதத்துடன்தான் இருக்கும். எனவே நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது எனக் கூறி, விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல் புறக்கணிக்கக் கூடாது. நெல் ஈரப்பதம் குறித்து கொள்முதல் நிலையங்களில் மத்தியக் குழு ஆய்வு செய்தது வரவேற்கத்தக்கது. ஆய்வறிக்கையை கிடப்பில் போடாமல், உடனடியாக மத்திய அரசிடம் வழங்க வேண்டும். ஈரப்பதத்தை பெரிதாகக் கணக்கில் எடுக்காமல், விவசாயிகளிடமிருந்து உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
ஆய்வின் போது, கட்சியின் ஒரத்தநாடு ஒன்றியச் செயலா் என். சுரேஷ்குமாா், ஊராட்சித் தலைவா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.