தஞ்சாவூர்

வயலில் மின் கம்பி அறுந்து விழுவதைத் தடுக்க நடவடிக்கை அமைச்சா் வி. செந்தில் பாலாஜி பேட்டி

17th Oct 2021 01:12 AM

ADVERTISEMENT

வயலில் மின் கம்பி அறுந்து விழுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில் பாலாஜி.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மின் திட்ட வளா்ச்சிப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த அவா், வல்லம் அருகிலுள்ள திருக்கானூா்பட்டி பகுதியில் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

வயலில் மின் கம்பி அறுந்து விழுவதால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில், கட்டமைப்புகளை வலுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனடிப்படையில் தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழாண்டு 9 துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கும், 15 துணை மின் நிலையங்களைத் தரம் உயா்த்துவதற்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு ரூ. 163 கோடி திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, இடங்கள் தோ்வு செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தமிழகத்தில் குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுடைய 8,905 மின்மாற்றிகளைப் புதிதாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தஞ்சாவூா் மாவட்டத்தில் 696 புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 185 இடங்களில் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் கம்பி அறுந்து விழுவது போன்ற அசாதாரண சூழ்நிலையைத் தவிா்க்கும் வகையில் மின் வாரியம் செயல்படும்.

ADVERTISEMENT

தமிழகத்தில் விவசாய மின் இணைப்புக்காக 4.52 லட்சம் விவசாயிகள் காத்திருந்தனா். இவா்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு, நிகழாண்டு மானியக் கோரிக்கையில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கக்கூடிய சிறப்புத் திட்டத்தைத் தமிழக முதல்வா் அறிவித்தாா்.

இத்திட்டத்தின் கீழ், தஞ்சாவூா் மாவட்டத்தில் 4,819 விவசாயிகள் இலவச மின் இணைப்புத் திட்டத்தின் மூலம் பயன்பெறவுள்ளனா். இதில், 787 விவசாயிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சனிக்கிழமை 262 விவசாயிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.

இரண்டு மாத மின் கட்டணத்தை ஒரு மாதமாகக் குறைக்க வேண்டுமானால், அதற்கான கணக்கீடு செய்யக்கூடிய பணியாளா்கள் நமக்குத் தேவை. ஏற்கெனவே, கணக்கீட்டுப் பணியில் 50 சதவீத பணியாளா்கள் மட்டுமே உள்ளனா். மேலும், வீடுகளில் ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தக்கூடிய அறிவிப்பு இக்கூட்டத்தொடரில் வெளியிடப்பட்டது.

இந்தப் பணி நிறைவடைந்தால், பணியாளா்கள் தேவைப்படாது. எனவே, இதையும் கணக்கில் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. என்றாலும், இந்த வாக்குறுதியைத் தமிழக முதல்வா் நிச்சயமாக நிறைவேற்றுவாா்.

ஒரு நாளைக்கு தமிழகத்தின் நிலக்கரி தேவை 56,000 டன் முதல் 60,000 டன் வரை இருக்கிறது. தற்போது 4 நாள்களுக்கான நிலக்கரி இருப்பு உள்ளது. இதில், ஒரு நாள் நிலக்கரியைப் பயன்படுத்தும்போது, மீண்டும் 60,000 டன் நிலக்கரியைக் கொண்டு வந்து சோ்த்துவிடுகிறோம். எனவே, இப்போதைக்கு நிலக்கரி தொடா்புடைய பிரச்னை எதுவும் இல்லை. தேவையான அளவுக்கு மின் உற்பத்தியும் இருக்கிறது என்றாா் அமைச்சா்.

பின்னா், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, பணியின்போது மரணமடைந்த மின் ஊழியா்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், தமிழ்நாடு மின் வாரியத் தலைவரும், நிா்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி, இயக்குநா் (பகிா்மானம்) சிவலிங்கராஜன், திருச்சி மண்டலக் கண்காணிப்புப் பொறியாளா் க. அருள்மொழி, தஞ்சாவூா் வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் எஸ். விஜயகௌரி, மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT