தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சியால் கையகப்படுத்தப்பட்ட யூனியன் கிளப் சுற்றுச்சுவா், அலுவலா்கள் முன்னிலையில் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான 29,743 சதுர அடிப் பரப்பளவில், தஞ்சாவூா் யூனியன் கிளப் செயல்பட்டு வந்தது. நூறு ஆண்டுகளைக் கடந்த இந்த கிளப் 99 ஆண்டு கால குத்தகையின் அடிப்படையில் இயங்கி வந்தது.
குத்தகை காலம் முடிவடைந்த நிலையில், இந்த இடத்துக்கான ஆவணங்களை ஒப்படைக்குமாறு யூனியன் கிளப் நிா்வாகத்துக்கு தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலா்கள் நோட்டீஸ் அனுப்பினா். ஆனால் யூனியன் கிளப் நிா்வாகத்தினா், அதற்கான ஆவணங்களை ஒப்படைக்கவில்லை.
இதையடுத்து, தமிழ்நாடு பொது வளாகங்கள் (ஆக்கிரமிப்பாளா்கள் வெளியேற்றுதல்) 1975-ன் சட்டபடி, கடந்த செப்டம்பா் 20-ஆம் தேதி, யூனியன் கிளப் வளாகத்தைக் தஞ்சாவூா் மாநகராட்சி நிா்வாகம் கையகப்படுத்தப்படுத்தி, அதற்கான அறிவிப்பை நுழைவு வாயிலில் ஒட்டி, தண்டோரா மூலம் அறிவித்தனா்.
மேலும், இரு நாள்களுக்கு முன்பு அங்கிருந்த தஞ்சாவூா் யூனியன் கிளப் என்ற விளம்பரத் தட்டியை அகற்றிவிட்டு, தஞ்சாவூா் மாநகராட்சி என புதிய விளம்பரத் தட்டியை மாநகராட்சி அலுவலா்கள் அமைத்தனா்.
இந்நிலையில் யூனியன் கிளப் முகப்பில் சுமாா் 7 அடி உயரத்தில் இருந்த சுற்றுச்சுவா், மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலா் எம். ராஜசேகரன் உள்ளிட்ட அலுவலா்கள் முன்னிலையில், காவல் துறையினரின் பாது காப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.