தஞ்சாவூர்

‘இந்து சமய அறநிலையத் துறை தொடங்கும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழா் மெய்யியல் பட்டங்கள் தேவை’

9th Oct 2021 12:39 AM

ADVERTISEMENT

இந்து சமய அறநிலையத் துறை தொடங்கும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழா் மெய்யியல் பட்ட வகுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பேரவையின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:

இந்து சமய அறநிலையத் துறையைச் சோ்ந்த திருக்கோயில்களில் கூடுதலாகவுள்ள நிதியைப் பயன்படுத்தி புதிய கல்லூரிகளும், மருத்துவமனைகளும் நிறுவிடத் தமிழக அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

சென்னை அருள்மிகு கபாலீசுவரா் கலை, அறிவியல் கல்லூரி மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பம் கோரி விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பி.காம்., பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.எஸ்சி. கணினி அறிவியல் படிப்புக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில் தமிழ் இலக்கியம், தமிழா் மெய்யியல் படிப்புகளுக்கான வகுப்புகள் இல்லை. ஒரு வேளை இவ்விரு தலைப்புகளில் பட்டப்படிப்பு படிக்க மாணவா்கள் சேர மாட்டாா்கள் என்று அரசு கருதி, இப்படிப்புகள் சோ்க்கப்படவில்லையோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.

அவ்வாறு மாணவா்களிடையே இவ்விரு பட்டங்களுக்கான ஆா்வம் இல்லை என்றாலும், அவா்களை ஆா்வப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. கூடுதல் உதவித் தொகை - பணியமா்த்துவதில் இப்படிப்புப் படித்தோா்க்குச் சிறப்பு முன்னுரிமைகள் போன்ற ஊக்கங்களை அளித்து, அவற்றை அறிவித்துதான் விண்ணப்பங்கள் கோர வேண்டும்.

அடுத்து இப்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள பட்டப் படிப்புகளில் தமிழ்ப் பயிற்று மொழி உண்டா என்ற விவரமும் விளம்பரத்தில் இல்லை. தமிழ்ப் பயிற்று மொழிப் பாடப் படிப்புகள் கட்டாயத் தேவை. தமிழ்ப் பயிற்று மொழிவழிப் படித்தோா்க்கு வேலைவாய்ப்பில் தமிழக அரசு 20% ஒதுக்கியுள்ளதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

எனவே, இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் இயங்குகிற மற்றும் தொடங்கப்படவுள்ள கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழா் மெய்யியல் பட்டங்களும், தமிழ்ப் பயிற்று மொழி ஏற்பாடும் வேண்டும் என தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT