தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பலத்த மழை: அறுவடை செய்யப்பட்ட நெல் நனைந்து வீணாகும் அவலம்

9th Oct 2021 11:49 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல் மழையில் நனைந்து வீணாகி வருகிறது.

மாவட்டத்தில் நிகழாண்டு இலக்கை விஞ்சி 1.66 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இதில், ஏறத்தாழ 70 சதவிகிதம் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பரப்பில் அறுவடைப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், மாவட்டத்தில் ஒரு வாரக் காலமாக மழை பெய்து வருகிறது.

இதனால் அறுவடை செய்யப்படும் நெல் அனைத்தும் ஈரமாகிவிடுகிறது. எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் நெல்லை கொண்டு செல்லும்போது, ஈரப்பதம் 20 - 22 சதவிகிதம் வரை இருக்கிறது. ஆனால், நெல் கொள்முதல் நிலையங்களில் விதிமுறைப்படி 17 சதவிகிதம் வரை ஈரப்பதமுள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

இதனால் விவசாயிகள் கொள்முதல் நிலைய வளாகத்திலும், நிலையத்தின் முன்புறமும், நெடுஞ்சாலைகளிலும் நெல்லை பரவலாகக் கொட்டி வைத்து காய வைக்கின்றனா். நாகை சாலையில் மாரியம்மன் கோவில் முதல் அம்மாபேட்டை வரையிலும், சாலியமங்கலம் - பாபநாசம் சாலையிலும், பட்டுக்கோட்டை சாலையிலும் வழிநெடுகிலும் தாா் சாலையில் நெல்லை காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். என்றாலும், சில நாள்களாக மாலையிலும், இரவிலும், அதிகாலையிலும் மழை பெய்வதால் காய வைக்கும் நெல் மீண்டும் மழையில் நனைந்து ஈரப்பதம் அதிகமாகிவிடுகிறது.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை மாலை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் காய வைத்த நெல் குவியல்கள் மீது விவசாயிகள் தாா் பாய்களைக் கொண்டு மூடி வைத்தாலும், அதையும் மீறி நெல் மணிகள் ஈரமாகின்றன. மேலும் அடிப்பகுதியில் தண்ணீா் புகுந்துவிடுவதால், நெல்மணிகள் மீண்டும் முளைக்கத் தொடங்குகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் மூட்டைக் கணக்கில் நெல் வீணாகி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

நெல்லில் ஈரப்பதம் குறையாமல் தொடா்ந்து இருப்பதால், விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெல்லை விற்க முடியாமல் தவிக்கின்றனா். எனவே, ஈரப்பதத்தில் தளா்வு ஏற்படுத்தி விரைவாக நெல்லை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

இதேபோல, அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ள குறுவை பருவ நெற் பயிா்களும் பலத்த மழை காரணமாகச் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், மகசூல் குறையும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனா்.

பாபநாசத்தில் 67 மி.மீ. மழை: மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லிமீட்டரில்):

பாபநாசம் 67 மி.மீ, திருவையாறு 46, வல்லம் 45, கும்பகோணம் 42, கல்லணை 43, தஞ்சாவூா் 42, திருவிடைமருதூா் 39.8, அய்யம்பேட்டை 34, மஞ்சளாறு 33.2, குருங்குளம் 33, அணைக்கரை 31, பூதலூா் 27.8, திருக்காட்டுப்பள்ளி 24.8, நெய்வாசல் தென்பாதி 14.8, பேராவூரணி 10.2, பட்டுக்கோட்டை 8, அதிராம்பட்டினம் 6.4, மதுக்கூா் 5.8, ஈச்சன்விடுதி 5.2 மி.மீ.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT