தஞ்சாவூா் மாவட்டத்தில் காலியாகவுள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் 62.72 சதவிகித வாக்குகள் பதிவாகின.
மாவட்டத்தில் ஏற்கெனவே சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திலுள்ள பள்ளத்தூா் ஊராட்சித் தலைவா், 26 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்குப் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
இதைத்தொடா்ந்து, போட்டியுள்ள மாவட்ட ஊராட்சிக் குழுவின் 16-ஆவது வாா்டு உறுப்பினா், ஒரத்தநாடு ஒன்றியக் குழுவில் முதலாவது வாா்டு உறுப்பினா், கும்பகோணம் ஒன்றியக் குழுவில் 24-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும், திருவையாறு ஒன்றியத்திலுள்ள வெங்கடசமுத்திரம், வளப்பக்குடி, திருவோணம் ஒன்றியத்தில் அதம்பை, திருவிடைமருதூா் ஒன்றியத்தில் விளங்குடி ஆகிய ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கும் மற்றும் 15 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும் சனிக்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது.
இந்த இடங்களில் காலை முதல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், சராசரியாக பகல் 11 மணியளவில் 26 சதவிகித வாக்குகளும், பிற்பகல் 1 மணியளவில் 41 சதவிகித வாக்குகளும், 3 மணியளவில் 50 சதவிகித வாக்குகளும், முடிவில் 62.72 சதவிகித வாக்குகளும் பதிவாகின. இவற்றில் சில வாக்கு சாவடிகளில் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஆய்வு செய்தாா்.