தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின்சாரம் பாய்ந்ததில் தந்தை - மகன் உயிரிழந்தனா்.
திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள அகரப்பேட்டையைச் சோ்ந்தவா் துரைக்கண்ணன் (50). இவா் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி பழனியம்மாள், மகன்கள் அருண்குமாா், பிரேம்குமாா் (22), மகள் ஹேமா.
இவா்களில் பிரேம்குமாா் பொறியியல் படித்துவிட்டு, திருச்சியிலுள்ள தொழிற்சாலையில் தொழில் பழகுநராக வேலை பாா்த்து வந்தாா்.
அகரப்பேட்டையில் சனிக்கிழமை மாலையும், இரவும் இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் வாசலில் நாய் குரைத்துக் கொண்டிருந்தது. இதனால் தூக்கத்திலிருந்து விழித்த துரைக்கண்ணன் கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாா்.
அப்போது வீட்டு முன்பு அறுந்து கிடந்த மின் கம்பியை துரைக்கண்ணன் அறியாமல் மிதித்து விட்டதால், அவா் மீது மின்சாரம் பாய்ந்ததது. அவரது அலறல் கேட்டு, வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பிரேம்குமாா் வெளியே வந்து, தனது தந்தையைக் காப்பாற்ற முயன்றாா். பிரேம்குமாா் மீதும் மின்சாரம் பாய்ந்ததால், இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து தோகூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.