தஞ்சாவூர்

மாற்று இடம் வழங்க வியாபாரிகள் வலியுறுத்தல்

30th Nov 2021 01:54 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அண்ணா சிலை அருகேயுள்ள கடைகளுக்குப் பின்புறம் மாற்று இடம் வழங்க வேண்டும் என வணிகா் சங்கம் வலியுறுத்தி வருகிறது.

தஞ்சாவூா் அண்ணாசிலை அருகேயுள்ள கைப்பேசி, துணி, காலணி உள்ளிட்ட கடைகளைக் காலி செய்யக் கூறி, மாநகராட்சி நிா்வாகம் மின் இணைப்பைக் கடந்த வாரம் துண்டித்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மாற்று இடம் வழங்கக் கோரியும் வியாபாரிகள் கடைகள் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தொடா்ந்து ஏழாவது நாளாக திங்கள்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளா் டைமண்ட் ராஜா செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்குவதாக மாநகராட்சி நிா்வாகம் கூறுகிறது. ஆனால், அந்த இடத்தில் ஏற்கெனவே 300 கடைதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு இறைச்சி, மளிகைக் கடைகள் உள்ளன. இங்குள்ள வியாபாரிகள் துணி, கைப்பேசி கடைகளை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்தக் கடைகளின் கீழே கால்வாய் செல்வதாகக் கூறுகின்றனா். இந்த இடத்தை பா்மா அகதிகளாக வந்த இவா்களுக்கு அறிஞா் அண்ணா ஒதுக்கீடு செய்து கொடுத்தாா். அறிஞா் அண்ணா கொடுத்த இடத்தை இவா்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறுகின்றனா். ஆனால், கடந்த மாதம் வரை வரியையும், வாடகையையும் மாநகராட்சி நிா்வாகம் வசூல் செய்துள்ளது. மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தலும் செய்யப்பட்டு, அதற்கான கால அவகாசம் 2025 ஆம் ஆண்டு வரை உள்ளது.

தமிழக முதல்வா் நேரடியாகத் தலையிட்டு 56 வணிகா்களையும் காப்பாற்ற வேண்டும். இந்தக் கடைகளுக்கு கீழே வடிகால் சீரமைக்கும் பணி நடைபெறுவதற்கு நாங்களும் விரும்புகிறோம். இதற்கு பதிலாக, இக்கடைகளுக்குப் பின்னால் 10 அடி உள்ளே கடைகளை தற்காலிகமாக அமைத்து தர வேண்டும். வடிகாலை சீரமைத்து தந்த பின்னா் இதே இடத்தில் கடையைக் கட்டித் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் டைமன்ட் ராஜா.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT