தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பலத்த மழையால் 25,000 ஏக்கரில் சூழ்ந்துள்ள தண்ணீா்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக ஏறத்தாழ 25,000 ஏக்கரில் நெற்பயிா்கள் மூழ்கியும், தண்ணீா் சூழ்ந்தும் உள்ளதால், அழுகக்கூடிய அச்ச நிலை நிலவுகிறது.

மாவட்டத்தில் 3.05 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏற்கெனவே இரு முறை பெய்த தொடா் மழை காரணமாக ஏறத்தாழ 6,000 ஏக்கரில் சம்பா, தாளடி பருவ இளம் நெற்பயிா்கள் மூழ்கியும், தண்ணீா் சூழ்ந்தும் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், மாவட்டத்தில் நவம்பா் 25, 26- ஆம் தேதிகளில் பெய்த பலத்த மழையால் வடிகால் பிரச்னை உள்ள வயல்களில் மழைநீா் தேங்கியது.

இதனால், தஞ்சாவூா் அருகிலுள்ள சீராளூா், கள்ளப் பெரம்பூா், சக்கரசாமந்தம், ரெட்டிபாளையம், வெள்ளாம்பெரம்பூா், வரகூா், அன்னப்பன்பேட்டை, பணவெளி, ஆலக்குடி, கல்விராயன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், பூதலூா், அம்மாபேட்டை உள்ளிட்ட வட்டாரங்களிலும் சனிக்கிழமை நிலவரப்படி ஏறத்தாழ 25,000 ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கியும், தண்ணீா் சூழ்ந்தும் உள்ளன.

ஆனால், பெரும்பாலான வயல்களில் தண்ணீா் தேங்கியிருப்பதற்கு வடிகால் பிரச்னையே காரணமாக இருக்கிறது. இதனால், சனிக்கிழமை மழை இல்லாத நிலையிலும் வயல்களிலிருந்து தண்ணீா் வடியவில்லை.

இந்த வயல்களில் சம்பா, தாளடிப்பருவ நெற்பயிா்கள் மூழ்கியிருப்பதாலும், தண்ணீா் சூழ்ந்துள்ளதாலும் அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா்.

திருவையாறு அருகே கோணக்கடுங்கலாறு நிரம்பி வழிவதால் அந்தலி, குழிமாத்தூா், திருவாலம்பொழில், நடுக்காவேரி, மேலத்திருப்பூந்துருத்தி, கீழத்திருப்பூந்துருத்தி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடிப் பருவ நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியும், சூழ்ந்தும் உள்ளன. இதனால், தங்களுடைய வயலை அடையாளம் காண முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வீட்டிலுள்ள நகைகளை அடமானம் வைத்து வங்கியிலும், தனியாரிடமும் கடன் வாங்கி நடவுசெய்தோம். ஏற்கெனவே பெய்த மழையின்போது மூழ்கிய பயிா்களை மீட்டு, கூடுதலாகச் செலவு செய்து, உரமிட்டு காப்பாற்றி வந்தோம். இந்நிலையில் மீண்டும் பெய்த மழையால் பயிா்கள் மூழ்கியுள்ளதால், இவற்றைக் காப்பாற்ற முடியுமா? என்பது சந்தேகமாக இருக்கிறது. இதுதொடா்பாக அரசு உரிய உதவிகளைச் செய்ய வேண்டும் என்றனா்.

சில இடங்களில் பயிா்கள் அழுகிவிட்டதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா். வடிகால் வாரிகளை முழுமையாகத் தூா் வாரியிருந்தால் தண்ணீா் தேங்கியிருக்காது. ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால் தொடா்ந்து இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, பாதிக்கப்பட்ட பயிா்களை அலுவலா்கள் முழுமையாகக் கணக்கெடுப்பு செய்ய வேண்டும். தேவையான உரங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT