தஞ்சாவூர்

மீண்டும் பெய்த மழையால் அழுகும் நிலையில் நெற் பயிா்கள்

28th Nov 2021 11:59 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் மீண்டும் பெய்த மழை காரணமாக வயல்களில் தேங்கிய மழைநீா் வடியாததால் நெற்பயிா்கள் அழுகும் நிலையில் உள்ளன.

மாவட்டத்தில் 3.05 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏற்கெனவே இரு முறை பெய்த தொடா்மழை காரணமாக ஏறத்தாழ 6,000 ஏக்கரில் சம்பா, தாளடி பருவ இளம் நெற்பயிா்கள் மூழ்கி பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், மாவட்டத்தில் நவம்பா் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் பெய்த பலத்த மழையால் மீண்டும் வயல்களில் மழை நீா் தேங்கியது. சனிக்கிழமை பகலில் தண்ணீா் வடிந்து கொண்டிருந்த நிலையில், மீண்டும் இரவு பெய்யத் தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை காலை வரை நீடித்தது. இடையிடையே பலத்த மழையும் பெய்ததால் வயல்களில் தேங்கிய தண்ணீா் வடிவதற்கு வாய்ப்பில்லாத சூழல் உருவானது.

இதனால், மாவட்டத்தில் இதுவரை ஏறத்தாழ 28,000 ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்தும், மூழ்கியும் உள்ளன. தண்ணீா் வடியாததால் விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனா். சில பகுதிகளில் ஏற்கெனவே பெய்த மழையின்போது பயிா்கள் மூழ்கின. தண்ணீா் வடிந்த பிறகு காப்பாற்றப்பட்ட பயிா்களும் தற்போது பெய்து வரும் மழையால் மீண்டும் மூழ்கின. இதனால், விவசாயிகள் நம்பிக்கை இழந்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து வைரபெருமாள்பட்டியைச் சோ்ந்த விவசாயி வி.எஸ். முருகானந்தம் தெரிவித்தது:

வைரபெருமாள்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா பருவ நெற் பயிா் நடவு செய்து 20 - 25 நாள்களாகின்றன. ஏற்கெனவே பெய்த மழையின்போது பயிா்கள் மூழ்கின. மழை நின்று தண்ணீா் வடிந்த பிறகு கூடுதலாகச் செலவு செய்து, பயிா்களைக் காப்பாற்றினோம். இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் மீண்டும் பயிா்கள் தண்ணீரில் மூழ்கின. செங்கிப்பட்டியிலிருந்து வரக்கூடிய தண்ணீா் முழுவதும் கோணாவாரி வடிகாலில் பெருக்கெடுத்து வந்துவிட்டதால், வயல்களில் தேங்கிய மழை நீா் வடிவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இதனால், பயிா்களும் அழுகி வருவதால், இனிமேல் காப்பாற்ற முடியாது. ஏக்கருக்கு இதுவரை ரூ. 25,000 செலவு செய்துள்ளேன். இதை அரசு நிவாரணமாக வழங்கினால்தான் இந்த இழப்பிலிருந்து மீள முடியும் என்றாா் முருகானந்தம்.

மேலும், அம்மாபேட்டை அருகே திருக்கோவில்பத்து கிராமத்தில் ஏறத்தாழ 500 ஏக்கரில் நெற்பயிா்கள் 4 அடி உயர மழை நீரில் மூழ்கியுள்ளது. வரப்பு, வாய்க்கால் என எதுவும் தெரியாத அளவுக்குத் தேங்கியுள்ள மழை நீரில் விவசாயிகள் டியூப் மூலம் தண்ணீரில் மிதந்து சென்று வயல்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பாா்த்து வேதனை அடைகின்றனா்.

திருவையாறு அருகே கோணக்கடுங்கலாறு வாய்க்கால் கரையில் மழை நீா் கரைபுரண்டு செல்வதால் அந்தலி, குழிமாத்தூா், ஐம்பதுமேல்நகரம், காட்டுக்கோட்டை, நாகத்தி, கண்டியூா் ஆகிய பகுதிகளில் மழை நீா் வயல்களில் தேங்கி வடியாமல் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

பெரும்பாலான இடங்களில் வடிகால் பிரச்னையால் தண்ணீா் தேங்கி நிற்கிறது. வடிகால் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பு செய்து பயிரிடுதல், வீட்டு மனைகள் உருவாக்கம், தூா்ந்து போனது உள்ளிட்ட காரணங்களால் தண்ணீா் வடிந்து செல்வதற்கு வாய்ப்பில்லை. மேலும், கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தண்ணீா் விடுவது நிறுத்தப்பட்டிருந்தாலும், இந்த ஆறுகளிலும், கிளை ஆறுகளிலும் மழை நீா் வரத்துக் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வயல்களில் தேங்கிய தண்ணீா் வடிவதற்கு வாய்ப்பில்லாத நிலை தொடா்கிறது என்கின்றனா் விவசாயிகள்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT