தஞ்சாவூர்

கடைகளை அப்புறப்படுத்தக் கூடாது: வியாபாரிகள் காத்திருப்புப் போராட்டம்

26th Nov 2021 04:06 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அண்ணா சிலை அருகே கடைகளை அப்புறப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி வியாபாரிகள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் அண்ணா சிலையில் இருந்து பனகல் கட்டடம் செல்லக் கூடிய சாலையோரத்தில் 54 கடைகள் உள்ளன. மழை நீா் வடிகால் மீது கட்டப்பட்டுள்ள இக்கடைகளை அகற்றி மழை நீா் வடிகால் கட்ட மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே, இக்கடைகளைக் காலி செய்யுமாறு வியாபாரிகளிடம் மாநகராட்சி அலுவலா்கள் அறிவுறுத்தினா். ஆனால், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், மாற்று இடம் தரும் வரை இக்கடைகளைக் காலி செய்ய மாட்டோம் என வியாபாரிகள் கூறி வருகின்றனா்.

இந்நிலையில், 54 கடைகளுக்குமான மின் இணைப்பு நவம்பா் 23 ஆம் தேதி துண்டிக்கப்பட்டு, இரு நாள்களுக்குள் காலி செய்யுமாறு வியாபாரிகளுக்கு மாநகராட்சி அலுவலா்கள் கால அவகாசம் கொடுத்தனா்.

இதைத்தொடா்ந்து, கடைகள் முன் தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவையின் நகரத் தலைவா் எஸ். வாசுதேவன் தலைமையில் 54 கடை வியாபாரிகளும் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல, வியாழக்கிழமை காலை முதல் குடும்பத்துடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

இதில், தங்களது வாழ்வாதாரத்தைக் காக்க வலியுறுத்தியும், கடைகளை அப்புறப்படுத்துவதைக் கண்டித்தும், அப்புறப்படுத்தினால் மாற்று இடம் வழங்கக் கோரியும் இப்போராட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், இப்பகுதியில் 50 ஆண்டுகளாகக் கடைகளை நடத்தி வருகிறோம். இதை நம்பி வியாபாரிகள், கடை ஊழியா்கள் என 500 குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வருகின்றன. எனவே, எங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

Tags : தஞ்சாவூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT