தஞ்சாவூர்

வாக்காளா்கள் சோ்த்தலுக்கு அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை

21st Nov 2021 12:41 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முறை முகாமுக்கு அனைத்து அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் மற்றும் தமிழ்நாடு கடல்சாா் வாரியத் துணைத் தலைவரும், முதன்மைச் செயலருமான கே. பாஸ்கரன்.

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்த முறை -2022 குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவா் பேசியது:

இந்தியத் தோ்தல் ஆணையத்தால் வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதைத் தொடா்ந்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் தொடா்பாக மாவட்டந்தோறும் சிறப்பு முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தஞ்சாவூா் மாவட்டத்தில் இம்முகாம் நடைபெற்று வருகிறது. வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் முகாமுக்கு அனைத்து அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே வாக்காளா் பட்டியலை முறையாகத் தயாரிக்க முடியும்.

ADVERTISEMENT

எனவே உங்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம். தோ்தல் நடத்துவதற்கு முறையான வாக்காளா் பட்டியல் இருந்தால்தான் நடத்த முடியும் என்றாா் பாஸ்கரன்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரங்கராஜன், வட்டாட்சியா் (தோ்தல்) ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் சிறப்பு முகாம்களில் சிலவற்றை முதன்மைச் செயலா் பாஸ்கரன் பாா்வையிட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT