தஞ்சாவூர்

இயற்கை விவசாயத்துக்காகப் பல்வேறு திட்டங்கள் அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பேச்சு

21st Nov 2021 12:43 AM

ADVERTISEMENT

இயற்கை விவசாயத்துக்கும், நஞ்சில்லா உணவு உற்பத்திக்கும் அரசுப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது என்றாா் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள எஸ்.இ.டி. மஹாலில் மாகாண ஒருங்கிணைந்த விவசாயிகள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச்சங்கம் சாா்பில் சனிக்கிழமை தொடங்கிய விவசாயம் மற்றும் பாரம்பரிய நெல் கண்காட்சியைப் பாா்வையிட்ட அவா் பேசியது:

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் மற்றும் பாரம்பரிய நெல் பாதுகாவலா் நெல் ஜெயராமனை போற்றும் வகையிலும், பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கவும் தமிழக முதல்வா் அறிவித்த பாரம்பரிய நெல் ஜெயராமன் பாதுகாப்பு இயக்கத்தின் சாா்பில் 200 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ. 25 லட்சம் மதிப்பில் பாரம்பரிய நெல் ரக விதைகள் உற்பத்தி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் 22.47 சதவிகிதமாக உள்ள தமிழக வனப்பரப்பை, அடுத்த 10 ஆண்டுகளில் ஐஎஸ்ஆா்ஓ விஞ்ஞானிகளின் ஆலோசனைகளின் அடிப்படையில் 33 சதவிகிதமாக உயா்த்த, தமிழக முதல்வா் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தொலைநோக்குத் திட்டமான பசுமைத் தமிழகம் இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

செயற்கைக்கோள் உதவியுடன் வனப்பரப்பு குறைவாக உள்ள இடங்களில் அதை மேம்படுத்தும் வகையில் குறுங்காடுகள், அடா் வனங்கள் உருவாக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்ய, இயற்கை விவசாயம் செய்ய தேவையான பல நல்ல திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா் அமைச்சா்.

இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில் நவீன விவசாயக் கருவிகள், விவசாய உபகரணங்கள், சாதனங்கள், பாரம்பரிய விதை ரகங்கள் உள்ளிட்டவை தொடா்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT