தஞ்சாவூர்

மழை பாதிப்புகளைக் கண்காணிக்க மண்டல அலுவலா்கள் நியமனம்

9th Nov 2021 01:15 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் மழை பாதிப்புகளைக் கண்காணிக்க மண்டல அளவில் அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கும் விதமாக 115 இடங்களில் 45,245 மணல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, களப்பணியில் ஈடுபடுத்த பணியாளா்களும் தேவையான அளவு உள்ளனா். மரங்கள் கீழே விழுந்தால் உடனடியாக அகற்ற மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜே.சி.பி. இயந்திரங்கள், ஜெனரேட்டா்கள் போன்றவையும் தேவையான அளவு உள்ளது. மழை நீா் வடிய தேவையான இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மழை பாதிப்புகளை கண்காணிக்க மண்டல அளவில் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மழை வெள்ள பாதிப்புகள் குறித்து புகாா் தெரிவிக்கும் வகையில் ஆட்சியரகம், கோட்டாட்சியரகங்கள், வட்டாட்சியரகங்கள் ஆகியவற்றில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மாவட்டத்தில் உள்ள 640 ஏரிகளில் தண்ணீா் நிரம்பி வருவதால், அவற்றை அலுவலா்கள் கண்காணித்து வருகின்றனா். மாவட்டத்தில் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ள 195 இடங்களில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது மேட்டூா் அணைக்குத் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால், அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. அணையிலிருந்து உபரி நீா் திறக்கப்படவுள்ளதால், ஆற்றங்கரையோரத்தில் வசிப்போா் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக கொள்ளிடம் ஆற்றில் உபரி நீா் திறக்கப்படவுள்ளதால், கரையோரத்தில் வசிப்போா் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றுக்குள் கால்நடைகளை யாரும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்.

மேலும் பொதுமக்கள் ஆற்றங்கரைக்கும், ஏரிகளுக்கும் தேவையில்லாமல் செல்ல வேண்டாம். பொதுமக்கள் கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT