தஞ்சாவூர்

பேராவூரணி வட்டாட்சியர் ஜீப் திருட்டு: சில மணி நேரத்தில் மீட்பு

7th Jul 2021 07:48 PM

ADVERTISEMENT


பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வட்டாட்சியர் ஜீப்பை மர்ம நபர் புதன்கிழமை திருடிச் சென்றார்.

அறந்தாங்கி வட்டாட்சியர் புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே ஜீப்பை மடக்கிப்பிடித்தார். 

பேராவூரணி வட்டாட்சியர் ஜெயலெட்சுமியை ஓட்டுநர் சிவகுமார் மதிய உணவிற்காக புதன்கிழமை அவரது வீட்டில் இறக்கிவிட்டுள்ளார். அதன்பிறகு, அலுவலக வாசலில் ஜீப்பை நிறுத்திவிட்டு, எதிரே உள்ள கடைக்கு சாப்பிட சென்றுள்ளார் ஓட்டுநர் சிவகுமார்.

வழக்கமாக ஜீப்பின் சாவி பகல் நேரங்களில் வண்டியிலேயே வைத்துவிட்டு செல்வது வழக்கமாம். இரவு மட்டும் நிறுத்திவிட்டு செல்லும்போது சாவியை எடுத்துச்செல்வார்களாம். ஓட்டுநர் சிவகுமார் சாப்பிட்டுவிட்டு வந்து பார்த்தபோது ஜீப்பை காணவில்லை.

ADVERTISEMENT

அவசர வேலை காரணமாக வட்டாட்சியர் எடுத்துச் சென்றிருக்கலாம் என விசாரித்தபோது இல்லை என தெரியவந்துள்ளது. அலுவலகத்திற்கு வெளியில் நின்றவர்களிடம் விசாரித்தபோது சேது சாலையில் ஒருவர் ஜீப்பை ஓட்டிச்சென்றதாகக் கூறியுள்ளனர். உடனடியாக கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் அலுவலக ஊழியர்கள் நாலாபக்கமும் தேடிச் சென்றனர்.

இந்நிலையில் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) அபிநயா, அறந்தாங்கி வட்டாட்சியர்  மார்ட்டின் லூதர் கிங்கிற்கு ஜீப் திருடுபோனது குறித்து தகவல் கொடுத்துள்ளார். அறந்தாங்கி பகுதி கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் கொடுத்து விசாரணை செய்ததில் நாகுடி பகுதியை நோக்கி பேராவூரணி வட்டாட்சியர் ஜீப் செல்வதாக காரக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் கணேசமூர்த்தி தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக நாகுடி வந்த வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங் எதிரே வந்த பேராவூரணி வட்டாட்சியர் ஜீப்பை மடக்கிப்பிடித்து ஜீப்பை திருடிச் சென்றவரை நாகுடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஜீப்பை திருடியவர் பேராவூரணி அருகே உள்ள திருவத்தேவன் கருப்பட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த வைரக்கண்ணு (24) என்பது தெரியவந்தது. எதற்காக ஜீப் திருடப்பட்டது என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : theft
ADVERTISEMENT
ADVERTISEMENT