தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே டிராக்டர் டிரெய்லர் சக்கரத்தில் சிக்கி 3 பேர் பலி

2nd Jan 2021 07:15 PM

ADVERTISEMENT

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சனிக்கிழமை பிற்பகல் டிராக்டர் டிரெய்லர் சக்கரத்தில் சிக்கியதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கீழபுனவாசல் தமிழர் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (32). இவர் தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வகத் தொழில்நுட்பநராகப் பணியாற்றி வந்தார்.
இவரும், தனது உறவினர்களான திருவையாறு மேல வட்டத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மனைவி சக்குபாய் (70), பிரகாஷ் மகன்கள் அகிலேஷ் (12), பரணீஸ் (10) ஆகிய 4 பேரும் மோட்டார் சைக்கிளில் திருவையாறிலிருந்து தஞ்சாவூர் நோக்கி சனிக்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தனர்.
 அரசூர் அருகே சென்றபோது ஒரு டிராக்டர் இரு டிரெய்லர்களில் குருங்குளம் சர்க்கரை ஆலைக்குக் கரும்புகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அரசூர் முருகன் கோயில் அருகே டிராக்டர் டிரெய்லரில் சாலையின் குறுக்கே மேலே இருந்த கேபிள் வயர் சிக்கியது. 
இதனால், கேபிள் வயர் அறுந்து டிராக்டரின் பக்கவாட்டில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மணிகண்டனின் கழுத்தில் விழுந்து சிக்கியது. இதனால், மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததால் இரண்டாவது டிரெய்லரின் பின் சக்கரத்தில் சிக்கி பலத்தக் காயமடைந்த மணிகண்டன், சக்குபாய், அகிலேஷ் ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 
பரணீஷ் காயத்துடன் உயிர் தப்பினார். தகவலறிந்த திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் சித்திரவேல், காவல் ஆய்வாளர் செந்தில்குமார், நடுக்காவேரி உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம் உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து தப்பியோடிய டிராக்டர் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Tags : thanjavur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT