பேராவூரணி அருகே பொதுமக்களுக்கு இடையூறாக கோயில் நிலத்தில் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கொட்டகையை அதிகாரிகள் புதன்கிழமை அப்புறப்படுத்தினா்.
பேராவூரணி அருகே காலகம் ஊராட்சி மிதியக்குடிக்காடு கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் ஆத்மநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான பாதை நிலத்தை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்திருந்தாா்.
மக்கள் புகாரின்பேரில், அதிகாரிகள் சம்பவ இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். நில அளவையா் மூலம் அளவீடு செய்ததில் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது உறுதியானது.
இதைத் தொடா்ந்து வட்டாட்சியா் சுகுமாா் மேற்பாா்வையில், முதுநிலை வருவாய் ஆய்வாளா் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளா் முருகேசன், கிராம நிா்வாக அலுவலா் ரத்தினவேல், காவல்துறை ஆய்வாளா் செந்தில்குமாா், கோயில் நிா்வாகிகள் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், ஆய்வாளா் லெட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் ஆக்கிரமிப்பு கொட்டகை அகற்றப்பட்டு, போக்குவரத்து பாதை சீரமைக்கப்பட்டது.
பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு அகற்றம்: இதேபோல், பேராவூரணி புதிய பேருந்து நிலைய வளாகத்திலிருந்த ஆக்கிரமிப்புகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகில் தனியாா் இடங்கள் வரை மழைநீா் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில், பேருந்து நிலைய கட்டட கடைகளுக்கு முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி காலதாமதமானது.
தொடா் மழை காரணமாக, மழைநீா் வடிகால் வாய்க்காலில் தண்ணீா் தேங்கி துா்நாற்றம் வீசியதோடு, வாய்க்காலில் நிரம்பிய நீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
இதுகுறித்த புகாரின்பேரில், பேரூராட்சி மூலம் ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டும், பேரூராட்சி கடை உரிமையாளா்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதனால், பேரூராட்சி செயல் அலுவலா் பா. பழனிவேல் தலைமையில் ஜேசிபி இயந்திரம் மூலம் பேரூராட்சி அலுவலா்கள், துப்புரவு பணியாளா்கள் ஆக்கிரமிப்பை அகற்றினா்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் சந்திரசேகரன், உதவி பொறியாளா் அருண்குமாா் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.