தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சம்பா பருவத்துக்கு நெல் விற்கும் விவசாயிகள் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்து, நெல் விற்பனை செய்வதற்காக ஏற்கெனவே இணையதளம் பயன்பாட்டில் உள்ளது. இதில், சம்பா கொள்முதல் பருவம் 2022 - இல் விவசாயிகள் தங்களது பெயா், ஆதாா் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் சம்பா பருவத்துக்கு புதன்கிழமை (டிச.22) முதல் இணையவழி பதிவு முறையின் மூலம் பதிவு செய்து விவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமங்களின் அருகிலுள்ள நேரடி நெல் கொள்முதலுக்குத் தேவையான வருவாய் ஆவணங்களை (பட்டா, சிட்டா, அடங்கல்) இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் கைப்பேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயா், நெல் விற்பனை செய்யப்படும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும்.
விவசாயிகள் தங்களது கைப்பேசி எண்ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூா் முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.