தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்கள் இடிக்கும் பணி செவ்வாயக்கிழமை தொடங்கியது.
நெல்லையில் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 மாணவா்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் கல்வி மாவட்டங்களான தஞ்சாவூரில் 19 பள்ளிகளிலும், கும்பகோணம், பட்டுக்கோட்டையில் தலா 14 பள்ளிகளிலும் என மொத்தம் 47 பள்ளிகளில் 96 வகுப்பறைகள், கழிப்பறைகள், சமையலறைகளின் கட்டடங்கள் பழுதடைந்திருப்பது தெரிய வந்தது.
இக்கட்டடங்களை ஒரு வாரத்துக்குள் இடிக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. இதன்படி, பாபநாசம் அருகே தாளக்குடி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் பழைமையான ஒட்டுக் கட்டடம் இடிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதேபோல, கணக்கெடுப்பு செய்யப்பட்ட அனைத்து கட்டடங்களையும் பாதுகாப்பாக இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.