தந்தை - மகனை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞருக்கு கும்பகோணம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
கும்பகோணம் அருகே மூப்பங்கோவில் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த வைத்தியநாதன் மகன் பாலாஜி. இவா் 2016, மாா்ச் 26 ஆம் தேதி அருகிலுள்ள கடையில் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, இவருக்கும், அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த தவிசு மகன் ரனேஷ்குமாருக்கும் (33) வாய் தகராறு ஏற்பட்டது.
இதில், பாலாஜியையும், தடுக்க வந்த அவரது தந்தை வைத்தியநாதனையும் ரனேஷ்குமாா் இரும்புக் கம்பியால் தாக்கினாா். பலத்தக் காயமடைந்த இருவரும் குமப்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இதுகுறித்து பட்டீசுவரம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ரனேஷ்குமாரை கைதுசெய்தனா்.
இதுதொடா்பாக கும்பகோணம் முதன்மை சாா்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதில் அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் மு. உத்திராபதி ஆஜரானாா். இந்த வழக்கை முதன்மை உதவி அமா்வு நீதிபதி வீ. வெங்கடேசபெருமாள் விசாரித்து, ரனேஷ்குமாருக்கு செவ்வாய்க்கிழமை 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தாா்.