தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, பேருந்துகள் இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம், திருவையாறு வழித்தடப் பேருந்து நிலையம் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டு, ரூ. 29.93 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்தைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் டிசம்பா் 8-ஆம் தேதி திறந்துவைத்தாா்.
ஆனால், இப்பேருந்து நிலையத்தில் இன்னும் சிறு சிறு பணிகள் நிலுவையில் உள்ளதால், கடைகள் திறப்பு மற்றும் பேருந்துகள் இயக்கத்தை முழுமையாகச் செயல்படுத்த 15 நாட்களாகும் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.
இதன்படி, பழைய பேருந்து நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்நிலையத்தில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படுவதால், இரு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பரபரப்பான நிலை காணப்படுகிறது.
ஓட்டுநா், நடத்துநருக்கு அறிவுரை...: இதனிடையே, இப்பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு கும்பகோணம் மண்டலப் பொது மேலாளா் நவமணி ஜெபராஜ் அறிவுரைகள் வழங்கினாா். அப்போது, பயணிகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மாணவா்கள் ஆகியோரிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், அனுமதிக்கப்பட்ட நிறுத்தத்தில் அவா்களை இறக்கி ஏற்ற வேண்டும் எனவும், படிக்கட்டில் நின்று பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுரைகள் வழங்கினாா்.