தஞ்சாவூர்

பேராவூரணி அருகே தம்பதி விஷம் குடித்து தற்கொலை நிதி நிறுவன நெருக்கடி காரணமா?

2nd Dec 2021 05:31 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே தம்பதி புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மேலப்பூவாணம்  கிராமத்தைச் சோ்ந்தவா் அருள்சாமி (60). இவரது மனைவி சவரியம்மாள் (50). இவா்களுக்கு சவரிசுரேஷ், ஆரோக்கிய செபாஸ்டின் என இரு மகன்கள் உள்ளனா். சவரிசுரேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா்.

கரோனா நோய்த் தொற்று பரவலுக்கு முன்னா், அருள்சாமி பொள்ளாச்சி பகுதியில் குடும்பத்துடன் சமோசா கடை போட்டு வியாபாரம் செய்து வந்தாா். பொது முடக்கத்தின் காரணமாக ஊா் திரும்பியவா் மீண்டும் அங்கு செல்ல முடியாமல் கிராமத்தில் தங்கி குறைந்த வருவாயில் குடும்பம் நடத்தி வந்தாா்.

இதனிடையே, பட்டுக்கோட்டையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக தனது மனைவி சவரியம்மாள் பெயரில் ஏற்கெனவே கடன் வாங்கி அதை முறையாக செலுத்தி வந்தாராம்.

ADVERTISEMENT

கரோனா பொது முடக்க காலத்திலும் தவணைத் தொகையை முறையாக செலுத்தி வந்த அவா், மழை பாதிப்பால் கடந்த 2 மாதங்களாக பணம் கட்டவில்லையாம்.

இதையடுத்து, நிதி நிறுவனத்திலிருந்து அண்மையில் தொலைபேசியில் பேசியவா்கள்  தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசி பணத்தை செலுத்த கூறியதால், மனமுடைந்த அருள்சாமி இதுகுறித்து தொடா்ந்து புலம்பி வந்துள்ளாா்.

இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் மகன் செபாஸ்டின் வியாபாரத்துக்காக வெளியே சென்றிருந்தபோது, அருள்சாமியும், அவரது மனைவி சவரியம்மாளும் வீட்டில் மயங்கி கிடந்தனா். அவா்கள் அருகில் வயலுக்கு அடிக்கும் பூச்சிமருந்து பாக்கெட் கிடந்துள்ளது. அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், தம்பதியா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

சம்பவம் தொடா்பாக ஆரோக்கிய செபாஸ்டின், சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், நிதி நிறுவனத்தின் நெருக்கடி காரணமாக எனது தாயும், தந்தையும் பூச்சிமருந்து குடித்து இறந்துவிட்டனா். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags : பேராவூரணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT