தஞ்சாவூர்

இரவு நேர ஊரடங்கால் விளைபொருள்களை அனுப்புவதில் சிக்கல்

DIN

தஞ்சாவூர்: தமிழக அரசு விதித்துள்ள இரவு நேர ஊரடங்கால் தஞ்சாவூரிலிருந்து நாள்தோறும் பெருநகரங்களுக்கு மலர்கள், பழங்கள் உள்ளிட்ட விளைபொருள்களை அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு,  பூதலூர் வட்டங்களிலிருந்து சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு நாள்தோறும் வாழை இலைகள், வாழைத்தார்கள், பழங்கள், மலர்கள் உள்ளிட்டவை ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் அனுப்பப்படுகின்றன. இந்தத் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர்.
கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக, வாழைத்தார்கள், வாழை இலைகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட விளைபொருள்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், வாழைத்தார்கள், வாழை இலைகள், மலர்கள் உள்ளிட்ட விளைபொருள்கள் தேக்கமடைந்து வீணாகின. இந்த நிலைமை 5 மாதங்களுக்குத் தொடர்ந்ததால் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினர். 
இந்நிலையில், கரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக, ஏப்.10-ஆம் தேதி முதல் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிடுவது, இரவு நேரம் திறந்து வைத்திருப்பது உள்ளிட்டவற்றுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 
இதன் காரணமாக, தஞ்சாவூரிலிருந்து கடந்த 10 நாள்களாக சென்னை, பெங்களூருவுக்கு வாழை இலைகள், வாழைத்தார்கள் அனுப்புவது குறைந்துவிட்டது. நாள்தோறும் சென்னைக்கு 50 லாரிகளில் வாழைத் தார்கள் அனுப்பப்பட்டு வந்த நிலையில்,  10 லாரிகளில் மட்டுமே அனுப்பும் நிலை ஏற்பட்டது. இதேபோல, நாள்தோறும் ஏறத்தாழ 10 லட்சம் வாழை இலைகள் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது ஏறக்குறைய 2 லட்சம் வாழை இலைகளாகக் குறைந்துவிட்டது. இதனால், ஏராளமான வாழை இலைகளும், வாழைத்தார்களும் மீண்டும் தேக்கமடைந்து வருகின்றன.  
தற்போது, செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு வாழை இலை, காய்கறிகள், மலர்கள், பழங்கள் போன்ற விளைபொருள்களை அனுப்புவதில் முழுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
விலக்கு அளிக்கப்படுமா?
இதுகுறித்து கணபதி அக்ரஹாரம் முன்னோடி விவசாயி ஜி. சீனிவாசன் தெரிவித்தது:
விவசாயிகளைப் பொருத்தவரை பகலில் பூக்கள், இலைகள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை அறுவடை செய்து, இரவு நேரத்தில் வாகனங்கள் மூலம் பெரு நகரங்களுக்கு அனுப்புவது வழக்கம். பகலில்தான் அனுப்ப வேண்டுமென்றால், இரவு நேரத்தில் அறுவடை செய்ய இயலாது.
தற்போது இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், வாகனப் போக்குவரத்து இரவில் தடைபட்டதால் பெருநகரங்களிலுள்ள சந்தைகளிலும் மலர்கள், காய்கறிகள், வாழை இலை, பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருள்களை வாங்க மறுக்கின்றனர். 
சந்தைகளில் விற்பனை குறைந்துவிட்ட நிலையில், விலையும் குறைந்துவருவதால் கட்டுபடியாகவில்லை. இதனால் பெருமளவிலான காய்கறிகள், பழங்கள், வாழை இலைகள் போன்ற அத்தியாவசிய விளைபொருள்கள் மீண்டும் வயலில் வீணாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 
விவசாயிகளுக்கு ஏற்கெனவே இயற்கையாக பல நஷ்டங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது செயற்கையாக மேலும் நஷ்டம் ஏற்படக்கூடிய அச்ச நிலை உள்ளது என்றார் சீனிவாசன்.
இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். பகலில் தற்போது நூறு டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை உள்ள நிலையில் வாகனங்களில் எடுத்துச் செல்ல இயலாது. இவற்றை பகல் நேரத்தில் வாகனங்களில் கொண்டு சென்றாலும், வெயிலில் பாதிக்கப்பட்டு வீணாகிவிடும்.
எனவே, இதற்கு மாற்று வழியாகப் பெருநகரங்களுக்கு விளைபொருள்களை எடுத்துச் செல்ல குளிரூட்டப்பட்ட வாகனங்களை அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் அல்லது காய்கறிகள், வாழை இலைகள், பழங்கள் போன்றவற்றை இரவு நேரத்தில் வாகனங்களில் கொண்டு செல்ல அரசு விலக்கு அளித்து, அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இல்லாவிட்டால் லட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் பேரிழப்பைச் சந்திக்கும் நிலை உருவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரேஸ் கல்லூரியில் கலை மன்ற விழா

எடத்துவா புனித ஜாா்ஜ்ஜியாா் திருத்தல திருவிழா ஏப். 27இல் தொடக்கம்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: ஜி.கே.வாசன்

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை: மே 2இல் தொடக்கம்

குமரி அருகே தகராறு: இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT