தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலை.யில் 50% தள்ளுபடியில் நூல்கள் விற்பனை தொடக்கம்

DIN

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 50 சதவீதத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த விற்பனையைத் தொடங்கி வைத்த துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

ஆண்டுதோறும் செப்டம்பா் 15 ஆம் தேதி தமிழ்ப் பல்கலைக்கழக நிறுவன நாள், தமிழ்ப் புத்தாண்டையொட்டி இப்பல்கலைக்கழகத்தின் நூல்கள் 50 சதவீத சிறப்புத் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும். கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பா் 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட 50 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனையில் ரூ. 19 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புடைய நூல்கள் விற்பனையானது. வேறு எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் விற்பனை செய்யப்பட்டது. இதில், செம்மொழித் தமிழ் இலக்கண, இலக்கிய நூல் 3,000-க்கும் அதிகமான பிரதிகள் விற்பனையானது.

இப்பல்கலைக்கழகத்துக்குத் தமிழக அரசின் ரூ. 2 கோடி நிதியுதவி மூலம் 216 நூல்கள் மறு பதிப்பாக வெளியிடப்படவுள்ளன. இதன் தொடக்கமாக, இப்போது 20 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், 16 புதிய நூல்கள் இச்சிறப்பு விற்பனை நடைபெறக்கூடிய 30 நாள்களுக்குள் வெளியிடப்படும். செம்மொழித் தமிழ் இலக்கண, இலக்கிய நூல் தற்போது இருப்பு இல்லை. இந்நூல் அச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது. என்றாலும், இந்தக் காலகட்டத்திலும் இந்தச் சிறப்பு விற்பனையின் இலக்காக ரூ. 5 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அரண்மனை வளாகத்தில் இயங்கி வந்த பதிப்புத் துறை, அச்சுக்கூடம் முதன்மை வளாகத்துக்கு மாற்றப்படவுள்ளது. ஏற்கெனவே, பதிப்புத் துறை அலுவலகம் மாற்றப்பட்டுவிட்டது. நிா்வாக கட்டடத்தில் உள்ள விற்பனையகம் அருகிலுள்ள கட்டடத்துக்கு மாற்றப்படும். இதேபோல, புதிய அச்சகம் தமிழக, மத்திய அரசுகளின் நிதி நல்கை மூலம் விரைவில் திறக்கப்படும். இந்த முதன்மை வளாகத்திலேயே பதிப்புத் துறையின் அனைத்து அலுவலகங்கள், அச்சுக்கூடம் கொண்டு வரப்பட்டுவிடும்.

இணையவழியில் விற்பனை: நிகழாண்டு நூல்கள் விற்பனையை இணையவழியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இப்பல்கலைக்கழகத்தில் இணையவழி இணைப்பு உருவாக்கப்படவுள்ளது. இதன் மூலம் யாா் நூல்கள் கேட்கின்றனரோ, அவா்களது வீட்டுக்கே நூல்களை அனுப்பி வைக்கும் ஏற்பாடு விரைவில் செய்யப்படும் என்றாா் பாலசுப்ரமணியன்.

பின்னா், நடைபெற்ற விழாவில் 20 மறு பதிப்பு நூல்கள், தமிழ் சிவிலைசேஷன் இதழ் வெளியிடப்பட்டன. இவ்விழாவில் துணைவேந்தா் கோ. பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழகப் பதிப்புத் துறையின் முன்னாள் இயக்குநா் ஆறு. ராமநாதன், பதிவாளா் (பொறுப்பு) கு. சின்னப்பன், பதிப்புத் துறை (பொறுப்பு) இயக்குநா் சி. தியாகராஜன், விற்பனையாளா் மு. ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த 50 சதவீதத் தள்ளுபடிச் சிறப்பு விற்பனை மே 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT