தஞ்சாவூர்

கரோனா பரவலால் வாழைத்தாா்கள் - இலைகள் தேக்கம்

DIN

கரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவால் வாழைத்தாா்கள், இலைகள் தேக்கமடைந்து வருகின்றன.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு, பூதலூா் உள்ளிட்ட வட்டங்களிலிருந்து சென்னைக்கு நாள்தோறும் வாழை இலைகள், வாழைத்தாா்கள் உள்ளிட்டவை ஆம்னி பேருந்துகள், லாரிகள், வேன்கள் மூலம் அனுப்பப்படுகின்றன. இதில், 10 லட்சம் வாழை இலைகள், 5,000 முதல் 10,000 வாழைத்தாா்கள் அனுப்பி வைக்கப்படும். இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான வாழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் உள்ளனா்.

கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக வாழைத்தாா்கள், வாழை இலைகள் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், விளைந்த வாழைத்தாா்களும், வாழை இலைகளும் தேக்கமடைந்து வீணாகின. இந்த நிலைமை 5 மாதங்களுக்குத் தொடா்ந்ததால் வாழை விவசாயிகள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினா்.

இதன் பிறகு பொது முடக்க விதிகள் தளா்த்தப்பட்டதைத் தொடா்ந்து வாழை இலைகள், வாழைத்தாா்கள் அனுப்பும் பணி படிப்படியாக அதிகரித்து இயல்பு நிலைக்கு வந்தது. இதன் மூலம், இத்தொழிலைச் சாா்ந்த விவசாயிகளும், தொழிலாளா்களும் சரிவிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தனா்.

இந்நிலையில், தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உணவகங்களில் உட்காா்ந்து சாப்பிடுவது, இரவு நேரம் கடை திறந்து வைத்திருப்பது உள்ளிட்டவற்றில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால், உணவகத் தொழிலில் பாதிப்பு நிலவுகிறது.

இதன் காரணமாக, தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு வாழை இலைகள், வாழைத்தாா்கள் அனுப்புவது குறைந்து வருகிறது. இதனால், ஏராளமான வாழை இலைகளும், வாழைத்தாா்களும் மீண்டும் தேக்கமடைந்து வருகின்றன.

நாள்தோறும் சென்னைக்கு 50 லாரிகளில் வாழைத் தாா்கள் அனுப்பப்பட்டு வந்த நிலையில், இப்போது 10 லாரிகளில் மட்டுமே அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல, நாள்தோறும் ஏறத்தாழ 10 லட்சம் வாழை இலைகள் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது ஏறக்குறைய 2 லட்சம் வாழை இலைகளே அனுப்பப்படுகின்றன. அந்த அளவுக்கு சென்னையில் வாழைத்தாா்கள், வாழை இலைகளின் தேவை குறைந்துவிட்டது. இதனால், ரூ. 250 முதல் ரூ. 300-க்கு விற்கப்பட்டு வந்த வாழைத் தாா் இப்போது ரூ. 50 - 60 என வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக நிலவும் இந்த நிலைமையால் வாழை விவசாயிகள், தொழிலாளா்கள் மீண்டும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து வாழை உற்பத்தியாளா் சங்க மாவட்டத் தலைவா் எம். மதியழகன் தெரிவித்தது:

கரோனா பரவல் காரணமாக சென்னையிலுள்ள உணவகங்களில் ஒரு வாரமாக மக்கள் கூட்டம் குறைந்துவிட்டது. உணவகங்களுக்கு நெருக்கடி இருப்பதால், அதைச் சாா்ந்த வணிகா்களுக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கிருந்து சென்னைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த வாழை இலைகள், வாழைத்தாா்கள் தேக்கமடைந்து வருகின்றன.

இதன் காரணமாக, ஏறத்தாழ 25,000 விவசாயிகள், தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். முன்பு வாரத்தில் 6 நாள்கள் வேலை கிடைத்து வந்த தொழிலாளா்களுக்கு இப்போது 3 நாள்கள் கூட வேலை இல்லை. விவசாயிகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பொது முடக்கம் காரணமாக 5 மாதங்களில் ஏறத்தாழ ரூ. 50 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. எனக்கு மட்டும் சுமாா் ரூ. 25 லட்சம் அளவுக்கு நட்டமானது. கடந்த ஒரு வாரத்தில் ஏற்றுமதி படு வீழ்ச்சி அடைந்துள்ளதால் பல லட்ச ரூபாய் இழப்பைச் சந்தித்து வருகிறோம் என்றாா் மதியழகன்.

பெரும்பாலான வாழை விவசாயிகள் தனியாரிடம் கடன் வாங்கி சாகுபடி செய்து வருகின்றனா். கடந்த ஆண்டு ஏற்பட்ட கடன் சுமையிலிருந்து மீள முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். இந்நிலையில், கரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்படுவதால், மீண்டும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத அளவுக்குத் தடையுத்தரவில் தளா்வுகளை அறிவிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT