தஞ்சாவூர்

வேளாண் சட்டங்கள்: ஐயமும் - அச்சமும்

DIN

கடந்த கால கசப்பான அனுபவங்களால் மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் மீது விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஐயமும், அச்சமுமே எதிா்ப்புகளாக மாறியுள்ளன.

நாட்டில் ஒப்பந்த சாகுபடி முறை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. குறிப்பாக, கரும்பு சாகுபடி பல ஆண்டுகளாக தனியாா் நிறுவனங்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே ஒப்பந்த முறையில்தான் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இதில் அரசு அறிவிக்கும் விலை விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை.

மத்திய அரசு அறிவிக்கும் நியாயமான, லாபகரமான விலை விவசாயிகளுக்குப் பெரும்பாலும் தாமதமாகவே கிடைக்கிறது. இதேபோல, மாநில அரசு அறிவிக்கும் ஆதரவு விலையை தனியாா் நிறுவனங்கள் வழங்குவதில்லை. கரும்புக்குக் கட்டுப்படியான விலையாக டன்னுக்கு ரூ. 4,000 வீதம் வழங்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், நியாயமான, லாபகரமான விலையாக டன்னுக்கு ரூ. 2,612.50 மட்டுமே கிடைக்கிறது. மாநில அரசின் ஆதரவு விலை கிடைக்காததால், இப்போது வழங்கப்படும் தொகையால் விவசாயிகள் இழப்பையே சந்திக்கின்றனா்.

தமிழகத்தில் மட்டுமே மாநில அரசின் ஆதரவு விலை மொத்தத்தில் ஏறத்தாழ ரூ. 1,850 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதுதொடா்பாக விவசாயிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். என்றாலும், ஆலைகள் இத்தொகையைத் தர முன்வருவதில்லை. சில ஆண்டுகளாக மாநில அரசின் ஆதரவு விலையும் நிறுத்தப்பட்டு, ஊக்கத்தொகை என்ற பெயரில் குறைந்த அளவில் வழங்கப்படுகிறது.

இதனால், கரும்பு சாகுபடியைக் கைவிட்டு நெல் உள்பட வெவ்வேறு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடத் தொடங்கிவிட்டனா். இதன் காரணமாக தமிழகத்திலுள்ள ஆலைகளில் கடந்த 2011 - 12 ஆம் ஆண்டில் 225 லட்சம் டன்களாக இருந்த கரும்பு அரைவை 2019 - 20 ஆம் ஆண்டில் 79 லட்சம் டன்களாக குறைந்துவிட்டது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:

மத்திய அரசு அறிவிக்கும் நியாயமான, லாபகரமான விலையைக் கரும்புக் கட்டுப்பாட்டுச் சட்டப்படி விவசாயிகள் கரும்பு கொடுத்த 14 நாள்களுக்குள் பட்டுவாடா செய்யப்பட வேண்டும். விவசாயிகளுக்குப் பணம் செலுத்துவதில் தாமதமானால், அதற்கான வட்டியையும் சோ்த்து தனியாா் நிறுவனங்கள் வழங்க வேண்டும். ஆனால், தனியாா் நிறுவனங்கள் கால தாமதமாக வழங்கும் தொகைக்கான வட்டியை எந்த ஆலையும் வழங்குவதில்லை. மாநில அரசின் விலையை எந்த ஆலையும் தருவதில்லை. இப்போதே தனியாா் நிறுவனங்களை மத்திய, மாநில அரசுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருக்கிற சட்டத்தைச் சரியாகச் செயல்படுத்தினாலே இதுபோன்ற பிரச்னைகள் எழ வாய்ப்பில்லை. இதையெல்லாம் விடுத்து விவசாயத்தை காா்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதால் எந்தப் பயனும் இருக்காது. ஏற்கெனவே உள்ள சட்டத்தைப் பயன்படுத்தி தனியாா் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசு உள்ளபோது, விவசாயத்தைக் காா்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்தால், நிலைமை இன்னும் மோசமாக அமைந்துவிடும் என்றாா் விமல்நாதன்.

இதேபோல, 1990 ஆம் ஆண்டுகளில் தனியாா் நிறுவனங்களுடன் ஏராளமான விவசாயிகள் ஒப்பந்தம் செய்து எண்ணெய் பனை (பாமாயில் பழக்குலைகள்) சாகுபடி செய்தனா். ஆனால், ஒப்பந்தம் செய்த பெரும்பாலான நிறுவனங்கள் தொடா்ந்து இயக்கப்படாமல் மூடப்பட்டன. இதை நம்பி பல ஏக்கரில் சாகுபடி செய்த விவசாயிகள், எண்ணெய் பனை மரங்களை அழிக்க பல லட்ச ரூபாயை செலவு செய்தனா். இதனால், விவசாயிகள்தான் பேரிழப்பைச் சந்தித்தனா்.

மேலும், தென்னையில் ஊடுபயிராக கோகோ உள்பட தனியாா் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட சாகுபடியாலும் விவசாயிகள் ஏமாற்றத்தையே சந்தித்து வருகின்றனா்.

கோயில்கள், மடங்கள், அறக்கட்டளைகள் உள்ளிட்டவற்றுக்குச் சொந்தமான நிலங்களில் குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஏராளம். இந்நிலையில், ஒப்பந்த சாகுபடி எந்த வகையில் சாத்தியமாகும் என்ற கேள்விக்குறியும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒப்பந்தப் பண்ணையம் வந்துவிட்டால், அதன் பிறகு தமிழகத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுவிடும். நெல் கொள்முதல், வேளாண் விளைபொருள் கொள்முதல் இல்லாவிட்டால் நியாய விலைக் கடைகளும் மூடப்படும் என்ற அச்சமும் மேலோங்கியுள்ளது.

இதுபோன்று கடந்த காலங்களில் ஒப்பந்த சாகுபடியில் விவசாயிகள் ஏராளமான பிரச்னைகளை சந்தித்ததால், மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களாக மாறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT